விமர்சனங்களுக்கு எனது பணிகளின் மூலம் பதிலளிப்பேன்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னை: முதல்வரின் வழிகாட்டலில், சக அமைச்சர்களோடு இணைந்து பணியாற்றுவேன் என்றும், விமர்சனம் செய்பவர்களுக்கு என்னுடைய செயல்கள் மூலம் பதிலளிப்பேன் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் ஆர்.பெரியகருப்பன், பி.கே.சேகர்பாபு, மூர்த்தி, சி.வி.கணேசன், மெய்யநாதன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, இ.பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, மாவட்ட செயலாளர் சிற்றரசு மற்றும் திமுக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கலைஞரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பெரியார் திடல் சென்று பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அங்கு அவரை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வரவேற்றார். பின்னர் கலைஞரின் கோபாலபுரம் இல்லம் சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி வணங்கினார். மேலும் கலைஞரின் சி.ஐ.டி.காலனி இல்லத்திற்கு சென்று கலைஞரின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி வணங்கினார். அப்போது ராஜாத்தி அம்மாள், கனிமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில், ‘‘எனக்கு துணை முதல்வர் பதவியை வழங்கியுள்ள முதல்வருக்கும், பொதுச்செயலாளருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். முதல்வர், மூத்த அமைச்சர்கள் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு மக்களுக்காக பணியாற்றுவேன். எனக்கு ஏராளமானோர் வாழ்த்துகளை தெரிவித்தனர். அதேபோல், விமர்சனங்களையும் தெரிவித்துள்ளனர். வாழ்த்தியவர்களுக்கும், விமர்சித்தவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்படும் போது விமர்சனம் வந்தது. அதற்கு எனது பணிகளால் பதிலளித்தேன். அதேபோல் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சரான போதும் விமர்சித்தனர். அந்த விமர்சனங்களை உள்வாங்கி கொண்டு பணியாற்றினேன். அதைப்போல இப்போதும் விமர்சிக்கின்றனர். அதை உள்வாங்கிக் கொண்டு என்னுடைய பணிகளின் செயல்பாடுகளால் பதிலளிப்பேன்’’ என்றார்.

பதவி அல்ல, பொறுப்பு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளம் பதிவில் கூறியிருப்பதாவது:
நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த திமுக தலைவர் முதலமைச்சர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம். ‘துணை முதலமைச்சர்’ என்பது பதவி அல்ல, பொறுப்பு என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, பெரியார், அண்ணா, கலைஞர் வகுத்து தந்த பாதையில், முதலமைச்சரின் வழிகாட்டலில், சக அமைச்சர்களோடு இணைந்து பணியாற்றுவோம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக உதயநிதி ஸ்டாலினின் குறிஞ்சி இல்லத்தில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். துணை முதலமைச்சர் என்பது பதவி அல்ல, பொறுப்பு. இதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, பெரியார், அண்ணா, கலைஞர் வகுத்து தந்த பாதையில், முதலமைச்சரின் வழிகாட்டலில், சக அமைச்சர்களோடு இணைந்து பணியாற்றுவோம்.

Related posts

அம்பேத்கர் சட்டப்பல்கலை. பட்டமளிப்பு விழா; 4,687 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர்

ஏமனுக்கு இஸ்ரேல் பதிலடி

மயிலாப்பூரில் அக்.3 முதல் 12 வரை மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்