அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உயர்த்திய பத்திரப்பதிவு கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பத்திரப்பதிவுக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியதை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை : தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பத்திரப்பதிவு கட்டணம் இரு மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை நிலத்தின் மதிப்புக்கு 9% பதிவுக்கட்டணமும், கட்டுமானத்துக்கு 4% பதிவுக்கட்டணமும் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி இரண்டுக்கும் சேர்த்து மொத்தமாக 9% பதிவுக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.25 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு இதுவரை அதிகபட்சமாக ரூ.1.15 லட்சம் வரை மட்டுமே பதிவுக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.2.25 லட்சம் செலுத்த வேண்டும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களால் தாங்க முடியாத கட்டண உயர்வு ஆகும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பு கடுமையாக உயர்த்தப்பட்டது.

அதன்பின் 20 வகையான சேவைகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன. அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக மக்களை கசக்கிப் பிழிவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இதை மனதில் கொண்டு கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பத்திரப்பதிவு கட்டணத்தை இதுவரை வசூலிக்கப்பட்ட அளவிலேயே இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூலுக்கு முக்கிய தொழில்நுட்பம்

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஏலகிரி மலையில் திரண்ட சுற்றுலா பயணிகள்

பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசு அலுவலர்கள் விரைந்து செயல்பட வேண்டும்