வருமானம் பார்க்கும் இடமாகவே பயன்படுத்தி வருகிறது பழமையான கோயில்களை பாதுகாப்பதில் அக்கறையில்லை: ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை கண்டனம்

மதுரை: ‘வருமானம் பார்க்கும் இடமாகவே பயன்படுத்தும் ஒன்றிய அரசு, பழமையான கோயில்களை பாதுகாப்பதில் அக்கறை காட்டுவதில்லை’ என ஐகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த சின்ராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தஞ்சை பெரிய கோயில் கிழக்கு நுழைவாயில் கோபுரம் ராஜராஜன் திருவாசல் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோபுரத்தின் அடிப்பகுதி அகலமானது மற்றும் மேற்கு முகத்தின் வலதுபுறத்தில் கீழ் மட்டத்தில் இந்திரனுக்கு துணை சன்னதி உள்ளது.

தஞ்சை பெரிய கோயிலில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திரன் சன்னதி பூட்டியே கிடக்கிறது. தற்போது வரை பூஜை மற்றும் வழிபாடு நடத்தப்படாததால், பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகிறது. எனவே, இந்திரன் சன்னதியை திறந்து பராமரித்து தினமும் காலை, மாலை வேளைகளில் இந்திரனுக்கு ஆராதனை செய்து வழிபட தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘‘ஒன்றிய தொல்லியல் துறை பழமை வாய்ந்த கோயில்களை பாதுகாப்பதில் போதிய அக்கறை காட்டுவதில்லை. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் அருகிலேயே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பிரகதீஸ்வரர் கோயில் பாதிக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. ஒன்றிய தொல்லியல் துறை கல்லறைகளை பாதுகாக்கவே உள்ளதாக தெரிகிறது.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில்கள் தொல்லியல் துறையின் பொறுப்பில் உள்ளன. அவற்றை பாதுகாப்பது அவர்களின் கடமை. ஆனால், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் இருந்து 20 மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சாலை விரிவாக்கத்திற்காக அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ஏராளமான கனரக வாகனங்கள் அப்பகுதியை கடந்து செல்கின்றன. வருங்காலத்தில் அக்கோயிலின் நிலை என்னவாகும் என யோசிக்கவில்லை. கோயில்களை வருமானம் பார்க்கும் இடமாகவே ஒன்றிய அரசு பயன்படுத்தி வருகிறது என்றனர். பின்னர், மனுவிற்கு ஒன்றிய தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு அரசுத் தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related posts

மகாளய அமாவாசை : மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!!

போதை மாத்திரைகள் விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை