தமிழகத்தின் ஒரு ரூபாய்க்கு ஒன்றிய அரசிடம் திரும்ப பெறுவது 29 பைசாதான்: நிர்மலா சீத்தாராமனுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி

சென்னை: தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்துக்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் இருந்து செல்லக்கூடிய ஒவ்வொரு ரூபாய்க்கும் ஒன்றிய அரசிடம் இருந்து திரும்ப பெறுவது 29 பைசாதான். முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்ட வெள்ள நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சென்னை தலைமை செயலகத்தில் அளித்த பேட்டி:

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் ஒரு விழாவில் பேசும்போது, தமிழகத்திற்கு அதிக நிதி தந்துள்ளதாக சில கருத்துக்களை கூறி உள்ளார். ஒன்றிய அரசு 2024-15ல் இருந்து 2022-23 வரை ஏறத்தாழ 4.75 லட்சம் கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு வழங்கி இருக்கிறது. இதில் ரூ.2.46 லட்சம் கோடி என்பது மத்திய வரிகளில் இருந்து வரி பகிர்வாகவும், ரூ.2.28 லட்சம் கோடி மானியம் மற்றும் உதவித்தொகை அடிப்படையில் அமைந்திருக்கிறது. அதே நேரத்தில் நேரடி வரி வருவாயாக ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் இருந்து ரூ.6.23 லட்சம் கோடி வசூலித்துள்ளது.

மறைமுக வரி வருவாய் குறித்து எந்த தகவலும் அவர்கள் நம்மிடம் பகிர்நது கொள்ளவில்லை. சட்டமன்றத்தில் ஏற்கனவே நான் சொன்னதைபோல, நம்மிடத்தில் இருந்து செல்லக்கூடிய ஒவ்வொரு ரூபாய்க்கும் நாம் அவர்களிடத்தில் பெறுவது 29 பைசாதான் திரும்ப பெறுகிறோம். ஆனால் பாஜ ஆளும் மாநிலங்களில் இந்த விகிதாச்சாரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. உதாரணத்துக்கு பாஜ ஆளும் மாநிலங்களில் 2014-2015ல் இருந்து 2022-23 வரை ரூ.2.23 லட்சம் கோடிதான் ஒன்றிய அரசுக்கு வரி வருவாய் மூலம் கொடுக்கிறார்கள் என்றால், ஒன்றிய அரசிடம் இருந்து அவர்களுக்கு வரக்கூடிய பணம் ரூ.15.35 லட்சம் கோடியாகத்தான் சில மாநிலங்களில் இருக்கிறது.

உதாரணமாக உத்தரபிரதேசத்தை எடுத்துக் கொள்ளலாம். தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதி ஒன்றிய அரசிடம் இருந்து வரவில்லை என்பதை 12வது முதல் 15வது நிதிக்குழுவின் புள்ளி விவரங்களை பார்த்தாலே தெரியும். தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் இந்திய அளவில் இருக்கும் மக்கள் தொகையில் 6.124 சதவீதம் வைத்திருக்கும் மாநிலத்திற்கு நிதித்துறையில் இருந்து வெறும் 4.79 சதவீதமாக மட்டுமே கிடைக்கிறது. செஸ், சர்சார்ஜ் மூலம் மாநில நிதியை ஒன்றிய அரசு அபகரிக்கிறது. 2011-12ல் ஒன்றிய அரசின் மொத்த வருவாயில் செஸ், சர்சார்ஜின் பங்கு 10.4 சதவீதமாக இருந்தது.

2021-22ல் ஒன்றிய அரசுக்கு செஸ், சர்சார்ஜ் மூலம் கிடைக்கும் வருவாய் 28.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. செஸ், சர்சார்ஜ் தொகையில் இருந்து மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்க தேவையில்லை என்பதால் மொத்த தொகையும் ஒன்றிய அரசுக்கு சென்றுவிடுகிறது. தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய தொகை வரவில்லை என்று புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது. நிதி ஆளுமையை மாநில அரசுகள் இழந்துள்ளன. எனவே இந்த நிதி நெருக்கடியிலும்கூட மக்கள் நலம் காக்கும் ஒரு அரசாக நாம் செயல்பட்டு வருகிறோம்.

ஆனால் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருப்பி திருப்பி கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு இரண்டு மடங்காக பணம் கொடுத்திருக்கிறோம் என்கிறார். பண மதிப்பையும், விலைவாசி மதிப்பையும் ஒப்பிட்டு பார்த்தால், பணத்தின் மதிப்பு இன்று எந்தளவுக்கு குறைந்திருக்கிறது என்று தெரியும். இப்போதும் நமது முதல்வர், வெள்ள நிவாரண உதவி கோரி ஒன்றிய அரசிடம் கேட்டுள்ள நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று வெள்ள நிவாரண நிதியை வழங்க வேண்டும். மிக்ஜாம் புயலுக்காக சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு ரூ.1,486 கோடியும், தென்மாவட்டங்களில் வெள்ள நிவாரண நிதியாக ரூ.541 கோடி என இதுவரை ரூ.2,027 கோடி வெள்ள நிவாரண நிதியாக மக்களுக்கு பணமாக வழங்கி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

* ஒன்றிய அரசு திட்டத்துக்கும் தமிழகம்தான் நிதி கொடுக்கிறது
ஒன்றிய அரசின், வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.72 ஆயிரம் ஒன்றிய அரசு கொடுக்கிறது. ஆனால் அவர்கள் கொடுப்பதைவிட இரட்டிப்பான தொகையை தமிழ்நாடு கொடுக்கிறது. நகர்ப்புற வாழ்விட பகுதிகளில் வீடு கட்டும் திட்டத்துக்கு ஒன்றிய அரசு ரூ.1.5 லட்சம் கொடுக்கிறது. தமிழ்நாடு அரசு ரூ.7 லட்சம் கொடுக்கிறது. ஒன்றிய அரசின் திட்டங்களுக்கும் தமிழ்நாடு அரசுதான் அதிக நிதியை கொடுத்துக்கொண்டு இருக்கிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

* மெட்ரோ திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை
சென்னை மெட்ரோ-2 ரயில் திட்டத்துக்கு ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான தொகை ரூ.63,246 கோடி. இதற்கு ஒன்றிய அரசும், மாநில அரசும் 50 சதவீதம் நிதி வழங்க வேண்டும். 2021-22ல் ஒன்றிய நிதி அமைச்சர் அடிக்கல் நாட்டியபோதும் சொன்னார். ஆனால் இன்று வரை அதற்கான பணம் ஒதுக்கப்படவில்லை. ஆனால், மகாராஷ்டிராவில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.28.493 கோடி ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவில் ரூ.17,532 கோடி ஒதுக்கியுள்ளது.

டெல்லி-உத்தரபிரதேசத்தில் ரூ.16,189 கோடி, மேற்கு வங்கத்தில் ரூ.13,109 கோடி, குஜராத்தில் ரூ.12,167 கோடி, உத்தரபிரதேசத்தில் ரூ.11,565 கோடி வழங்கியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ.3,273 கோடி மட்டுமே ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. இதில் இருந்தே எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு கோடி, தமிழ்நாட்டிற்கு ஏன் இவ்வளவு குறைவு என்பதை புரிந்துகொள்ள முடியும். சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்துக்கு ஒன்றிய அரசு உறுதி அளித்தபடி இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அதேபோன்று ரயில்வே திட்டங்களுக்கும் 2.5 சதவீதம் மட்டும்தான் நிதி ஒதுக்கப்படுகிறது. ரயில்வே திட்டத்திற்கான கடைசி 5 வருடத்தில் ரூ.18 ஆயிரம் கோடி மட்டுமே கொடுத்திருக்கிறார்கள் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

Related posts

சோழவரம் அருகே குளத்தில் மூதாட்டி சடலம் மீட்பு

நாளை சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம்: மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டுகோள்

பூண்டி நீர்த்தேக்கத்தில் செத்து மிதக்கும் மீன்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை