ஓய்வுபெற்ற பெண் எஸ்ஐ மர்மமாக இறந்த வழக்கில் மதிமுக மாவட்ட செயலாளரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற பெண் எஸ்ஐ மர்மமாக இறந்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் மதிமுக மாவட்ட செயலாளரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் காலாண்டார் தெருவை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற பெண் எஸ்ஐ கஸ்தூரி (62). கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி என்பவர் இடம் வாங்கி கொடுத்த வகையில் அறிமுகமானார்.

இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கஸ்தூரிக்கு அவரது உறவினர் போன் செய்தனர். கஸ்தூரி, எடுக்கவில்லை. 2 நாட்களாக போனை எடுக்காததால் உறவினர் சந்தேகத்துடன், வளையாபதிக்கு போன் செய்து கேட்டுள்ளார். அதற்கு அவர், ‘நேரில் பார்த்து விட்டு ெசால்கிறேன்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து வளையாபதி, காலாண்டார் தெருவில் உள்ள கஸ்தூரி வீட்டுக்கு சென்றார். அங்கு, கஸ்தூரி சடலமாக கிடந்தார். உடலை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனே சிவகாஞ்சி போலீசாருக்கு தெரியப்படுத்தினார். போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும் நேற்று முன்தினம் கஸ்தூரியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை மற்றும் உடல் அடக்கம் செய்யப்பட்ட சம்பவங்களில் கஸ்தூரியின் மகனுடன், மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதியும் உடனிருந்தனர்.

இந்நிலையில் நேற்று வளையாபதி, தனது மனைவியுடன் ஒரு வேலை விஷயமாக சென்னைக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தனர். வாலாஜாபாத் வழியாக காஞ்சிபுரம் நோக்கி வந்தபோது கருக்குப்பேட்டை அருகே டிஎஸ்பி மணிமேகலை தலைமையிலான போலீசார், காரை வழிமறித்தனர். பின்னர், மனைவியை அவரது வீட்டில் இறக்கி விட்டு வளையாபதியையும், அவரது கார் டிரைவரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இரவு முதல் விடிய விடிய ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, ‘சந்தேகத்தின் அடிப்படையில் மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதியிடம் விசாரணை நடத்தி வருகிறோம்’ என மட்டும் தெரிவித்தனர். விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வளையாபதி எங்கு இருக்கிறார் என போலீசார் எதுவும் தெரிவிக்காததால் அவரது கட்சி தொண்டர்களிடையே பரபரப்பு நிலவியது. அதனால் குழப்பம் அடைந்துள்ள மதிமுகவினர், காஞ்சிபுரம் அடுத்த திருவீதிபள்ளம் பகுதியில் உள்ள கலால் காவல் நிலையம், சுங்குவார்சத்திரம் காவல் நிலையம் முன்பு குவிந்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தை கேள்விட்டதும் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா காரில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு எஸ்பி சண்முகத்தை நேரில் சந்தித்து பேசினார்.

Related posts

தீப்பிடித்து எரிந்த தயாரிப்பாளர் கார் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டு நாசம்: திருப்பத்தூர் அருகே பரபரப்பு

அதிகாரி மிரட்டியதால் அஞ்சலக பெண் ஊழியர் தற்கொலை

பைக் மீது மோதிய கார் கவிழ்ந்து 3 பேர் பலி