ஓய்வுபெற்ற பெண் இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் மதிமுக மாவட்ட செயலாளர் கைது: மேலும் ஒருவருக்கு போலீஸ் வலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஓய்வுபெற்ற பெண் இன்ஸ்பெக்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மதிமுக மாவட்ட செயலாளரை, போலீசார் கைது செய்தனர். மேலும், மற்றொரு குற்றவாளியை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் காலாண்டார் தெருவை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற பெண் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி (62). கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இவரின், ஒரே மகன் டேராடூனில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ரியல் எஸ்டேட் மூலம் ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் கஸ்தூரிக்கு, இடம் வாங்கி ெகாடுத்ததன் காரணமாக, மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி அறிமுகமாகி உள்ளார். இந்நிலையில், கடந்த 22ம்தேதி வீட்டில் கஸ்தூரி தலைகுப்புற கவிழ்ந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த சிவகாஞ்சி போலீசார், கஸ்தூரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மர்ம மரணமாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இவ்வழக்கில் திடீர் திருப்பமாக மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி மற்றும் பிரபு ஆகிய 2 பேரும் சேர்ந்து, கஸ்தூரியை கொலை செய்தது தெரியவந்தது. இந்த, வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு, குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், சென்னையில் சொந்த வேலையாக சென்றுவிட்டு தனது மனைவியுடன் வளையாபதி நேற்று முன்தினம் இரவு வாலாஜாபாத் வழியாக காஞ்சிபுரம் நோக்கி வந்துள்ளார்.

அப்போது, கருக்குப்பேட்டை அருகே டிஎஸ்பி மணிமேகலை தலைமையிலான போலீசார் வழிமறித்து மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி மற்றும் அவரின் டிரைவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து ரகசிய இடத்தில் வைத்து வளையாபதியிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், நேற்று மாலை கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்றொரு குற்றவாளியான பிரபு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

திமுக பவளவிழா பொதுக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துரை

புகையிலை பொருட்களை சப்ளை செய்த வடமாநில வாலிபர் கைது

ரூ.200 கோடிக்கு இரிடியம் விற்கலாம் என கூறி ரூ.65 லட்சம் மோசடி; கோவை வாலிபரை கூலிப்படை ஏவி கொன்ற ஐஸ் கம்பெனி அதிபர் கைது