ஈரோடு தொகுதியில் ஏற்பட்ட தோல்வியால் விரக்தி அதிமுக வேட்பாளர் நடத்திய 10 ரூபாய் உணவகம் திடீர் மூடல்: தேர்தல் ‘ஸ்டன்ட்’  அம்பலம்

காங்கயம்: பொதுமக்களுக்கு சேவையாற்றுவதாக ‘ஸ்டன்ட்’ அடித்த ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த விரக்தியில் மலிவு விலையில் பல்வேறு இடங்களில் தான் நடத்தி வந்த ஆற்றல் உணவகங்களை மூடினார்.  ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர் ஆற்றல் அசோக்குமார். பிரபல பள்ளிகளை நடத்தி வரும் இவர் தேர்தல் வேட்புமனுவில் ரூ.550 கோடி சொத்து மதிப்பை காட்டி மிரள வைத்தார்.

அசோக்குமார் முன்னாள் அதிமுக எம்.பி. சவுந்திரத்தின் மகனும் தற்போதைய மொடக்குறிச்சி தொகுதி பாஜ எம்எல்ஏவுமான சரஸ்வதியின் மருமகனும் ஆவார். முதலில் பாஜவில் மாநில பொறுப்பில் இருந்தார். ஈரோடு தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். இந்நிலையில் அதிமுக, பாஜ கூட்டணி முறிவு ஏற்பட்டது. மேலும் தமிழக பாஜ தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பாஜவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு அதிமுகவில் இணைந்தார்.

ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், காங்கயம், தாராபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக திட்டமிட்டு செயல்பட்டார். கடந்த சில ஆண்டுகளாக சட்டசபை தொகுதிகளில் கோயில்கள், அரசு பள்ளிகள் ஆகியவற்றில் சமூகப்பணிகளில் ஈடுபட்டார். தேர்தல் தேதி நெருங்க நெருங்க 6 தொகுதிகளிலும் 10 ரூபாய்க்கு உணவு வழங்குவதாக ஆற்றல் உணவகம் என்ற பெயரில் உணவகத்தை தொடங்கி நடத்தி வந்தார்.

காலை, மதியம், இரவு என 3 வேளைக்கும் தலா ரூ.10 கட்டணம் என்பதால் ஏழை எளிய மக்கள் சாப்பிட்டு வந்தனர். இந்நிலையில் ஈரோடு தேர்தலில் திமுக வேட்பாளர் பிரகாசிடம் ஆற்றல் அசோக்குமார் தோல்வி அடைந்தார். இதையடுத்து பொதுமக்களுக்கான சேவை என்ற பெயரில் நடத்தி வந்த ஆற்றல் உணவகத்தை அவர் திடீரென மூடினார். அதன்படி திருப்பூர் மாவட்டம் காங்கயம், மூலனூர், கன்னிவாடி, குண்டடம், தாராபுரம் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவோடு இரவாக உணவகத்தை காலி செய்தனர்.

மக்களுக்கு சேவை செய்வதாக விளம்பரப்படுத்தி ஆற்றல் அசோக்குமார் துவங்கிய சில மாதங்களில் மலிவு விலை உணவகங்களை திடீரென மூடியதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். பல இடங்களில் தலைமை ஏற்று ஆற்றல் உணவகத்தை திறந்து வைத்த அதிமுக நிர்வாகிகள், தற்போது உணவகத்தை மூடியதால் பொதுமக்கள் தங்களை கேள்வி கேட்பார்களே என்ற கலக்கத்தில் உள்ளனர். தேர்தலுக்காகத்தான், சேவையாற்றுவதாக ஆற்றல் அசோக்குமார் ‘ஸ்டன்ட்’ அடித்திருக்கிறார் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்