வளங்கள் பகிரப்படுவதற்கே

(2 கொரிந்தியர் 8: 1-15)

கிறிஸ்துவம் காட்டும் பாதை

கடவுளின் படைப்போ அல்லது இயற்கையின் கொடையோ அது உலக மக்கள் யாவருக்கும் மற்றும் உயிரினங்கள் அனைத்திற்கும் சொந்தமானது. இயற்கை வளங்கள் தனியுடைமையாக்கப்படுவதும், சுரண்டப்படுவதும், அழிக்கப்படுவதும் இயற்கைக்கு எதிரானது மட்டுமல்ல, அது மனித இனத்திற்கும் பிற உயிர்களுக்கும் தீங்கு விளைவிப்பது ஆகும். ஆனால், இன்று தனியுடைமை, முதலாளித்துவம், லாபம், சொத்துக் குவிப்பு, பேராசை முதலியவை மனிதர்களை இயற்கைக்கு எதிராகச் சிந்திக்கவும் செயல்படவும் வைப்பதினால் இயற்கை வளங்கள் வெகுசிலரின் சொகுசு வாழ்க்கைக்கு உரியதாக்கப்பட்டுள்ளது.

இயற்கை ஒரு நுகர்வுப் பொருளாகவும், பயன்படுத்தித் தூக்கி எறியும் சரக்காகவும் மாறிவிட்டது. இதன் விளைவுதான் மலைச்சரிவுகள், அண்டார்டிகா பனிக்கட்டி உருகுதல், பெருவெள்ளம் பேரழிவு என்பதெல்லாம். நம்முடைய தொன்மைச் சமூகம் இயற்கையை அதன் அழகோடு மாசுபடாமல், அதைச் சிதைக்காமல் பொறுப்போடு நம்மிடம் விட்டுச் சென்றது. ஆனால், இன்றைய நாகரிகச் சமூகம் இரண்டு நூற்றாண்டுகளிலேயே இயற்கையை முடிவு நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது. இத்தகைய சூழலில் வளங்கள் பகிரப்படுவதற்கே என்பதை தூய பவுல் அடிகள் மாசிதோனியா திருச் சபையை உதாரணமாகக் காண்பித்து எடுத்துரைக்கிறார்.

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து சீடர்களிடம் நற்செய்தியை அறிவிக்கும் பொறுப்பை ஒப்படைத்து தமது தந்தையாகிய கடவுளிடம் திரும்பிச் சென்றார். இயேசு கிறிஸ்துவின் கட்டளையை சிரமேற்கொண்டு சீடர்கள் கிராமங்கள் நகரங்களென இயேசு கிறிஸ்துவின் கற்பித்தலையும் புரட்சிகரப் பண்பாட்டையும் பரப்பி வந்தனர். இதனால், பலர் கிறிஸ்தவத்தைத் தழுவினார்கள். இதில் பலதரப்பட்ட மக்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் பாமரர், ஏழைகள் மற்றும் பெண்களாக இருந்தனர்.

இந்த நற்செய்திப் பணியை முழுநேரமாக எடுத்துப் பணியாற்றியவர்கள் பல நேரங்களில் வறுமையில் வாடினர். இச்சூழலில் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அவர்களுக்கு மனமுவந்து பொருளுதவி செய்தனர். அப்படிச் செய்தவர்களில் மாசிதோனியா திருச்சபை முக்கிய இடம் பெருகிறது. அதற்குக் காரணம், மாசிதோனியா திருச்சபை தங்கள் வறுமையிலிருந்து வள்ளன்மையோடு வாரி வழங்கியதுதான்.

மாசிதோனியா திருச்சபையைப் பின்பற்றி கொரிந்து சபையும் வளங்களைப் பகிர்ந்தளிக்க முன்வர வேண்டும் எனப் பவுல் வேண்டுகோள் விடுத்தார். இவ்வாறு கொடுப்பதினால் கொடுப்பவர் வறுமை நிலைக்குத் தள்ளப்படக் கூடாது எனும் தமது அக்கரையை வெளிப்படுத்தினார். அதே சமயம் வளங்களைப் பகிர்வதின் நோக்கம் அனைவரும் சமநிலைக்கு வருவது தான் என்கிற சமத்துவச் சிந்தனையையும் அவர் வெளிப்படுத்தினார்.

பகிர்வு என்பது கிறிஸ்தவக் கலாச்சாரமாக்கப்பட வேண்டும் என்று பவுல் விரும்பினார். பகிர்வுக் கலாச்சாரத்தை இயேசுகிறிஸ்து தாம் வாழ்ந்த காலத்திலேயே தொடங்கி வைத்தார். கிறிஸ்தவ வழிபாடுகளில் பின்பற்றப்படும் திருவிருந்து உண்மையில் அது ஒரு உணவுப் பகிர்தல் நிகழ்ச்சியாகும். அது தொடக்க காலத்தில் இருப்பவர் கொண்டு வரும் உணவை இல்லாதவர் வரும் வரைக் காத்திருந்து அவருடன் சேர்ந்து பகிர்ந்து உண்ணும் ஒரு நிகழ்வாகவே இருந்தது. மிகுதியாக இருப்பவர்கள் குறைவுபட்டு இருப்பவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

பகிர்வுக்குத் தடையாக இருப்பது தேவைக்கு அதிகம் சேர்த்தல் மற்றும் பதுக்குதல் ஆகும். இந்தியாவில் இது சர்வசாதாரணம். தேவைக்கு மிகுதியாக சேர்த்தல் தவறு என்பதை வலியுறுத்தப் பவுல் அடிகள் பழைய ஏற்பாட்டு நிகழ்வு ஒன்றைக் குறிப்பிடுகிறார். இஸ்ரவேல் மக்களின் விடுதலைப் பயணம் பாலைவனம் மற்றும் கரடு முரடான பாதையில் தொடர்ந்தது. அப்போது அவர் உணவு மற்றும் தண்ணீர்த் தட்டுப்பாட்டை பல நேரங் களில் சந்தித்தனர். ஒரு சமயம் அவர்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது வானத்திலிருந்து கடவுள் அப்பத்தையும் இறைச்சியையும் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு கிடைத்த உணவை அவர்கள் சேகரித்தபோது யாரிடத்திலும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சேரவில்லை என நினைவு கூரப் படுகிறது. அவரவர் தங்கள் தேவைக்கேற்ப சேர்த்தனர் என்பதுதான் பொருள். பற்றாக்குறை என்பது இவ்வாறு சிலர் கணக்கற்று சேர்த்து வைப்பதில்தான் உள்ளது. அதைச் செய்தல் தவறு என்று அக்காலத்திலேயே சிந்தித்தது நடைமுறைப்படுத்தியது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

Related posts

துலாம் ராசியினரின் வாழ்க்கை துணை

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம் இருப்பதாகச் சொல்லுகின்றார்களே. வாத்சல்யம் என்றால் என்ன?