எதிர்ப்பு வலுக்கிறது

இந்தியாவிலேயே அதிக மருத்துவக்கல்லூரிகளை கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. இங்கிருந்து அதிக எண்ணிக்கையில் மருத்துவப்படிப்புகளுக்கான ‘சீட்’கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. உயர்கல்வி பயில்வோர் குறித்த இந்திய அளவிலான கணக்கெடுப்பிலும் தமிழ்நாடுதான் முன்னிலை வகிக்கிறது. மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில்தான் உயர் கல்வி பெறுவோர் எண்ணிக்கை 20 சதவீதம் கூடுதலாக இருக்கிறது.

ஆக, நிறையபேர் உயர் கல்வி பயிலும் மாநிலத்தில்தானே நீட் தேர்வினால் ஏற்படும் சாதக, பாதகங்கள் முதலில் தெரியவரும். அந்த வகையில், நீட் தேர்வினால் பாதகங்களே அதிகமாக இருக்கிறது என்ற சமூக அநீதியை முதன்முதலாக கண்டறிந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. அதனால்தான், ஆரம்பத்தில் இருந்தே இத்தேர்வை தமிழ்நாடு எதிர்க்கிறது. ஆனால் ஒன்றிய அரசு செவிசாய்க்கவில்லை. நேர்மையாக நடைபெறும் தேர்வு என்று கூறி வந்தது.

ஆனால் தற்போது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ள முறைகேடுகள் ‘நீட் ஒரு மோசடி’ என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. 67 பேர் ஒரே மதிப்பெண் பெற்றது, நீட் தேர்வு வெளியான தேதி, முழு மதிப்பெண் பெற்றவர்களில் 7 பேர் அருகருகே உள்ள வரிசை எண்களை கொண்டவர்களாக இருந்தது, கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, பாட்னா போலீசார் 13 பேரை நீட் தேர்வு மோசடியில் கைது செய்தது போன்றவைதான் நீட் ஒரு மோசடி என்பதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு அமைச்சர் மா. சுப்பிரமணியன், ‘‘நீட் தேர்வில் இருக்கும் குழப்பங்கள், குளறுபடிகள் காரணமாகவே நீட் விலக்கே நம் இலக்கு என கூறி வருகிறோம். தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தேசிய தேர்வு முகமை பதில் அளிக்கவேண்டும்’’ என்று கூறியுள்ளார்.  முறைகேடுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் இதுவரை வாய் திறக்காமல் இருந்த அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்து உள்ளன.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ‘‘வெளியிடப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக பாமக, விடுதலை சிறுத்தை என பல கட்சிகளும் கரம் கோர்த்துள்ளன. முறைகேடு தொடர்பாக மாணவர்களின் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்கவேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

பல்வேறு மோசடி நடந்துள்ளதால், இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டுள்ளது. ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என திமுக அன்றே போராட்டத்தை துவக்கிவிட்டது. தொடர்ந்து போராடி வருகிறது.

‘‘நீட் எனும் பிணியை அழித்தொழிக்க கரம் கோர்ப்போம். நீட்டை ஒழித்துககட்டும் நாள் வெகு தொலையில் இல்லை’’ என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று சூளுரைத்துள்ளார். அவரது முதல் குரலை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் வலுத்துள்ளதால் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, பழைய நடைமுறையை அமல்படுத்துவதே சிறந்தது.

Related posts

ஹரியானா சட்டமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை