Saturday, October 5, 2024
Home » எதிர்ப்புகளை அகற்றும் வாராகி வழிபாடு

எதிர்ப்புகளை அகற்றும் வாராகி வழிபாடு

by Lavanya

வாராகியை எட்டு பேர் உருவங்களில் வழிபடுகின்றனர். இது சப்தமாதர், அஷ்டபைரவர் நவசக்திகள் வழிபாடு போலவே சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இதில் நடுவில் மகா வாராகியையும் சுற்றியுள்ள ஏழு தளங்களில் 1. உன்மத்த வாராகி, 2. லகு வாராகி, 3. ஆதி வாராகி, 4. மஹிக்ஷாரூடா வாராகி, 5). ஸிம்ஹா ரூடவாராகி, 6). அஸ்வாரூட வாராகி, 7. ஸ்வப்பன வாராகி ஆகிய வாராகியின் ஏழு மூர்த்தங்களையும், அமைத்து வழிபடுகின்றனர். இதை அஷ்ட வாராகி வழிபாடு எனவும் அழைக்கின்றனர். பெரும்பாலும் இது சாக்த தந்திரர்களால் நடத்தப்படும் வழிபாடாகும்.

வாராகி மாலை

அந்தாதியாக அமைந்த இந்நூலில் 82 பாடல்கள் உள்ளன. 100 பாடல்கள் இருந்திருக்க வேண்டும் என்றும், அவற்றில் மறைந்தது போக 82 பாக்களே கிடைத்ததாகவும் அறிஞர்கள் கூறுகின்றனர். இதன் முதற்பாடலில் ஒன்பது இரத்தினங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதைக் காண்கிறோம். 1). இரண்டு குழைகள் கோமளம் 2). புஷ்பராகம் போன்ற திருவடிகள் 3). குருவிந்தமணி நீலம் போல் கண்கள் 4). கோமேதகம் போன்ற கரங்கள் 5). வைரம் பாய்ந்த நகங்கள் 6). முத்துப் போல் பிரகாசிக்கும் புன்னகை
7). பவளம் போல் சிவந்த உதடுகள் 8).மரகதக் கொடி போல் திலகம் அணிந்தவள் என்று நவரத்ன மயமாக அவளது மேனி விளங்குவதை இந்நூலின் முதற்பாடல் குறிக்கிறது. இறுதிப்பாடல் அவளைச் சிவஞான போதகி, கபாலினி, திகம்பரி, அகோரி என சிவம் எனும் செம்பொருள் சேர்ந்தவளாகக் கூறுகிறது.

அனந்த வாராகி

பயிர்த்தொழிலைக் காக்கும் தெய்வங்களில் நாகதேவர்கள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றனர். பூமியின் அடியில் வாழும் நாதர்கள் பூமியின் புதல்வர்கள், மண்ணைச் செழிக்கச் செய்பவர்கள். நாகர்களின் மன்னனாகவும் சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டராகவும் இருப்பவர். அனந்தன் என்னும் பாம் பரசன் ஆவார். இவர் அனைத்துத் தெய்வங்களுடன் தொடர்புள்ள மகாநாகன் ஆவார். இவருடைய அம்சமாகவே வாராகி தோன்றினார் என்று கூறுகின்றனர். இதையொட்டி வாராகியை அனந்த வாராகி என்றும் அழைக்கின்றனர். பாம்புப் படம் குடைபிடிக்க வீற்றிருக்கும் அனந்த வாராகியை சாக்த தந்திரத்தினர் சிறப்புடன் வழிபடுகின்றனர்.

சமண சமயத்தில் வாராகி

சமண சமயத்தில் வாராகி வழிபாடு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. தென்னக ஜைன க்ஷேத்திரமான திருமலையில் பஞ்ச யக்ஷியருக்கான பெரிய ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஐம்பெரும் யக்ஷிகள் அமைக்கப்பட்டுள்ளனர். ஆலயத்தில் நெடிய வடிவில் அமர்ந்துள்ள இந்த யக்ஷிகள் பெரும் சிறப்புப் பெற்றுள்ளனர். இதிலுள்ள வாராகி பெருஞ்சக்தியும், வரபலமும் தரும் தெய்வமாகக் கொண்டாடப்படுகிறார்.

ஞானிகள் போற்றும் வாராகி

வாராகி மிகுந்த பலம் கொண்டவள். எதிரிகளை அழிப்பவள். அகப்பகையையும், புறப்பகையையும் வென்றழிப்பவள். ஞானிகள் தம் உள்ளத்தில் தோன்றும் அகங்காரம் என்னும் செடிக்கு வேராக உள்ள அகந்தைக் கிழங்கைத் தோண்டி அழித்து ஞானத்தைச் செழிக்கச் செய்கிறாள் என்கின்றனர். இதுபோன்று வாராகியைப் பல்வேறு நிலைகளில் அன்பர்கள் வழிபடுகின்றனர்.

சிவ வாராகி- விஷ்ணு வாராகி

வாராகியின் வடிவம் பூமியின் அம்ச மாகும். பூமாதேவியின் அம்சமாகத் தோன்றிய அவளுக்குச் சிவபெருமான் உழுவதற்காக ஏர்க் கலப்பையையும், தண்டிப்பதற்கான உலக்கையையும் அளித்தார். திருமந்திரத்தில் திருமூலர் அவளை உழூபடை ஒருத்தி என்றும் ஈனவர் ஆகம் இடிக்கும் முசலத்தி என்றும் குறிக்கின்றார். இதன்மூலம் அவள் ஏர்க் கலப்பையும், உலக்கையும் கொண்டவளாக விளங்குகின்றார் என்பதை அறிகிறோம். சிவாலயங்களில் அமைந்துள்ள அனைத்து வாராகி திருவுருவங்களும் ஏரும், உலக்கையும் கொண்டதாகவே அமைக்கப்பட்டுள்ளன. சிலர் வாராகி என்றதும், விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான வராக (பன்றி அவதாரம்) அவதாரத்தின் பெண் அம்சம் என்றே கொண்டனர். அதையொட்டி வாராகியை சங்கு, சக்கரம் ஏந்தியவளாக அமைத்தனர். இதனால் சிற்சில இடங்களில் வாராகி சங்கு சக்கரத்துடன் விஷ்ணு வாராகியாகக் காட்சி தருகிறார். மக்கள் இவளை விஷ்ணுவாராகி என்று அழைக்கின்றனர். அன்பர்கள் துர்க்கையை சிவதுர்க்கை, விஷ்ணுதுர்க்கை என்று கொண்டாடு வதைப் போலவே, வாராகியையும் சிவவாராகி என்றும், விஷ்ணு வாராகி என்றும் அழைத்து வழிபடுகின்றனர். சென்னையை அடுத்துள்ள திருமுல்லைவாயில் பச்சையம்மன் கோயிலில் கருவறையின் மேற்குச் சுவர்களில் சிவ வாராகி-விஷ்ணு வாராகி ஆகிய இருவரையும் தனித்தனி மாடங்களில் காணலாம்.

ருத்ர வாராகி

ரௌத்திரம் என்பதற்கு அடங்காத ஆத்திரம் என்பது பொருள். ஆத்திரமும் அதனால் உண்டாகும் கோபமும் நிறைந்தவன் உருத்திரன் எனப்படுகிறான். அதேபோன்று கோபாவேசம் கொண்ட வாராகி, ரௌத்திர வாராகி என்று அழைக்கப்படுகிறாள். அவளையே ருத்ர வாராகி என்கிறோம். இவள் சிவ வாராகி போல் ஏர்கலப்பை, தண்டமோ அன்றி, விஷ்ணு வாராகி போல் சங்கு சக்கரமோ ஏந்தாமல் வாள், கேடயம், சூலம் கபாலம் ஏந்துகின்றாள். பூத வாகனத்தில் பவனி வருகிறாள். இவளை வழிபடுவதால் பகைவர் நாசம் அடைவர். மனதில் உறுதி உண்டாகும்; எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும்.

ஜெயசெல்வி

 

You may also like

Leave a Comment

2 + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi