குடியிருப்பு பகுதியில் திரியும் கரடிகள் நெல்லையில் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சும் பொதுமக்கள்

விகேபுரம்: நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் கரடிகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி மலையடிவாரத்திலுள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகிறது. குறிப்பாக, அகஸ்தியர்புரம், அனவன் குடியிருப்பு, விகேபுரம், சிவந்திபுரம், கோட்டைவிளைபட்டி, செட்டிமேடு ஆகிய பகுதிகளில் கரடிகள் ஜோடியாகவும், தனித்தனியாகவும் இரவு நேரங்களில் உலா வருகிறது. விகேபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் 10க்கும் மேற்பட்ட கரடிகள் சுற்றித் திரிகின்றன. இந்த கரடிகளை பிடிக்க கோட்டை விளைபட்டி, அகஸ்தியர்புரம், செட்டிமேடு பகுதியில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கரடிகள் கூண்டில் சிக்காமல் ஹாயாக உலா வருகிறது. நள்ளிரவு நேரங்களில் மட்டுமே உலா வந்த கரடி தற்போது பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் போதே குடியிருப்பு பகுதிக்குள் சர்வ சாதாரணமாக வலம் வருகின்றன. கடந்த 30ம் தேதி இரவு 9.50 மணிக்கு டாணா காளிபார்விளை தெருவில் ஒற்றை கரடி சுற்றி திரிந்தது. குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்த கரடியை பார்த்த பொதுமக்கள் அச்சத்தில் வீட்டிற்குள் முடங்கினர்.

இது தொடர்பாக பொதுமக்கள் சிலர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வனத்துறை சார்பில் கரடியை வனப்பகுதிக்குள் விரட்ட எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கரடிகள் குடியிருப்பு பகுதிகளை சுற்றி, சுற்றி வருகிறது. இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் டாணா காளிபார்விளை தெருவில் முருகன் என்பவரது வீட்டிற்குள் கரடி புகுந்தது. வீட்டின் வாரண்டாவில் சுற்றித் திரிந்த கரடியை கண்டவுடன் தெருவில் உள்ள நாய்கள் குரைத்து கொண்டே இருந்தது. அப்போது சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் வீட்டின் வெளியே லைட் அடித்து பார்த்துள்ளனர். இதில் கரடி தொடர்ந்து உறுமி கொண்டே அங்கிருந்து வெளியேறி சென்றது. நேற்று முன்தினம் மணிமுத்தாறு பகுதியில் ஒரு வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையை உடைத்த கரடி வீட்டினுள் புக முயற்சித்தது. வீட்டிலிருந்தவர்கள் லைட் அடித்து சப்தமிட்டதால் ஓடி விட்டது.

இதுவரை தெருக்களில் மட்டுமே சுற்றித்திரிந்த கரடி தற்போது வீட்டிற்குள்ளும் வர ஆரம்பித்து விட்டதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே, வனத்துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘விகேபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் கரடிகள் சுற்றித் திரிவதால் அச்சத்தில் உள்ளோம். பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரங்களில் சுற்றி திரிந்த கரடிகள் தற்போது இரவு 9, 10 மணிக்கே குடியிருப்பு பகுதியில் ஹாயாக உலா வருகிறது. இந்த கரடிகளால் அசம்பாவிதம் சம்பவம் ஏற்படுவதற்கு முன்பு கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

 

Related posts

மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தைக்கு பெண் ஒருவர் மிரட்டல்

பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு

கர்ப்பிணியின் வயிற்றின் மீது நாய் ஏறியதால் கலைந்த 4 மாத கரு