இழுவை இட ஒதுக்கீடு

மக்களவையிலும், மாநில சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது இந்தியாவை பொறுத்தவரை நீண்ட நெடிய கனவு என்றுதான் சொல்ல வேண்டும். அந்தக் கனவை நனவாக்கிட பல்வேறு அரசியல் சாயங்கள் அவ்வப்போது பூசப்பட்டு வந்திருக்கின்றன. அதுமட்டுமின்றி, தேர்தல் காலங்களில் எல்லாம், தாய்மார்களின் ஓட்டுக்களைப் பெற்றிட பல்வேறு வாக்குறுதிகளை அளிப்பதும் வழக்கமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் விட, பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கக்கூடிய ஒன்று. 1996ம் ஆண்டு கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இந்நிலையில், நாடு முழுவதும் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கடந்த செப்டம்பர் மாதம் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டது. ஆனால், இது நடைமுறைக்கு வர வேண்டுமானால், தொகுதி மறு வரையறை செய்ய வேண்டும். அதற்கும் முன்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதுவும் 2024 தேர்தலுக்கு பிறகுதான் மக்கள்தொகை, மறுவரையறை என பல ஆண்டுகள் இழுத்துக் கொண்டே போகும் நிலைதான் காணப்படுகிறது. எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிட இப்போதைக்கு சாத்தியமில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜெயா தாக்கூர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புதிய மனுவில், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை வரும் தேர்தலுக்கு முன்பாக அமல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இந்த மனுவை ஒத்தி வைத்த உச்ச நீதிமன்றம், மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த கோரி மத்திய அரசை உத்தரவிடுவதற்கு சாத்தியமில்லை எனவும், மகளிர் இட ஒதுக்கீடுக்கான இடங்கள், உள்ஒதுக்கீடு ஆகியவற்றை முடிவு செய்த பின்னர் தான் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு அரசியல் கட்சிகளிடம் தெளிவான பதில் இல்லை. அதிலும் பல வடமாநிலங்களில் மகளிர் இட ஒதுக்கீடு என்பது பல்வேறு அரசியல் கட்சியினருக்கு வேப்பங்காயாக உள்ளதாக தெரிகிறது. எனவே, அவர்கள் முடிந்தவரை இதை தள்ளி போடவே முயற்சி செய்யவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தியாவில் 2011ம் ஆண்டுக்கு பின்னர் இன்னமும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கவில்லை. கடந்த 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாததற்கு கொரோனா பரவல் காரணமாகக் கூறப்பட்டது.

வரும் ஆண்டுகளில் மக்கள் தொகை கணக்ெகடுப்பு முதலில் நடத்தப்பட வேண்டும். அதன் பின்னர் தொகுதி வரையறைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், தொகுதி வரையறை செய்யும்போது அதன் இறுதி அறிக்கையை வழங்க அதற்கான ஆணையம் 3 முதல் 4 ஆண்டுகள் வரை எடுத்து கொள்ளும். எனவே பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு செயல்பாட்டுக்கு வர குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை ஆகலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பெண்கள் முன்னேற்றத்திற்காக நாங்கள் இடஒதுக்கீடு கொண்டு வருகிறோம் என ஒன்றிய அரசு மார்தட்டி கொண்டாலும், அது இழுவை இடஒதுக்கீடாகவே இருக்க வாய்ப்புகள் அதிகமுள்ளன.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது