ஆராய்ச்சி படிப்பை தொடர 120 மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.25,000 ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில், முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகைத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 120 மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.25,000/- ஊக்கத்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியருடைய ஆராய்ச்சி திறனையும், புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்கப்படுத்திடும் வகையில், முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்தில் பயன்பெற்றிட ஆராய்ச்சி மாணவர்களை தெரிவு செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு 10.12.2023 அன்று நடத்தப்பட்டு, 120 மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களில் 60 மாணவர்கள் அறிவியல் பாடப் பிரிவையும், 60 மாணவர்கள் கலை, மானுடவியல் மற்றும் சமூகவியல் பாடப் பிரிவையும் சார்ந்தவர்கள் ஆவர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 120 மாணவ, மாணவியர்கள் தங்கள் ஆராய்ச்சி படிப்பினை அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொடர மாதம் ரூ.25,000 ஊக்கத் தொகையாக மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்திற்காக 12.31 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை தொடங்கி வைக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர், தெரிவு செய்யப்பட்ட 120 மாணவ, மாணவியர்களில் 10 மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்திற்கான ஆணைகளை நேற்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், உயர்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், கல்லூரி கல்வி இயக்குநர் கார்மேகம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்

பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார்; ‘குவாட்’ உச்சி மாநாட்டை கண்டு சீனா அஞ்சுவது ஏன்?.. வல்லரசு நாடுகளுடன் இந்தியா கைகோர்த்ததால் தலைவலி

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை, மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை