ஆராய்ச்சியை முடக்குவதா

தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பதாக கூறி ஒன்றிய அரசு இந்தாண்டு விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் ஆராய்ச்சி நிதியை நிறுத்தியிருக்கிறது. இதனால் ஆராய்ச்சி பணிகள் முடங்கும் அபாயம் உள்ளது. அறிவியல் ஆராய்ச்சி குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை. இதை ஊக்கப்படுத்தும் முயற்சியில் ஒன்றிய அரசு இறங்க வேண்டிய நிலையில், ஆராய்ச்சி நிதி நிறுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் புதுப்புது கண்டுபிடிப்புகள், நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வருகின்றன.

நவீன தொழில்நுட்பங்களை மற்ற நாடுகளிடம் இருந்து வாங்குவதை காட்டிலும், நாமே கண்டுபிடித்து உருவாக்குவது தான் மிக சிறந்தது என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும். அதிநவீன தொழில்நுட்பங்களையும், வியத்தகு கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடிப்பதில் மற்ற நாடுகளின் விஞ்ஞானிகளை விட நமது விஞ்ஞானிகள் மிக சிறந்தவர்கள். இதற்கான அடித்தளத்தை அமைத்து கொடுக்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது. ஆராய்ச்சி மேற்கொள்வதே சவாலாக இருந்தால், எப்படி புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்க முடியும்? நிதி இல்லாமல் ஆராய்ச்சி மேற்கொள்ள முடியாது.

அறிவியல் கண்டுபிடிப்பில், சில நேரங்களில் ஆராய்ச்சிகள் தோல்வியில் முடியும் நிலை ஏற்படும். தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, அடுத்தடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இதற்கு நிதி இல்லாமல் ஆராய்ச்சி மேற்கொள்வது எப்படி? இதனால் அடுத்தடுத்த ஆராய்ச்சிகளும் கேள்விக்குறியாக இருக்கின்றன. அறிவியலை ஊக்குவிப்பதாக ஒன்றிய அரசு கூறி வருகிறது. வார்த்தைகளால் மட்டுமே அறிவியலை ஊக்குவிக்க முடியாது. குறைவான நிதி மூலம் எதிர்பார்த்த அளவுக்கு ஆராய்ச்சி செய்ய முடியாது. ஆராய்ச்சி மேற்கொள்ள விஞ்ஞானிகள் கிடைக்காமல் பல நாடுகள் தத்தளித்து வருகின்றன. ஆனால், நம் நாட்டில் திறமை வாய்ந்த விஞ்ஞானிகள் நிதி இல்லாமல் திண்டாடி வருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

நிதி ஆதாரம் வலுவாக இருந்தால் மட்டுமே, ஆராய்ச்சிகளை அடுத்த கட்டத்திற்கு விஞ்ஞானிகள் கொண்டு செல்ல முடியும். விஞ்ஞானிகளின் திறமையை முழுமையாக பயன்படுத்தினால், மிக சிறந்த கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க முடியும், இதற்கு நிதி முக்கியமானது. அறிவியல் ஆராய்ச்சிகளால் நாட்டில் பல்வேறு மாற்றங்களை செய்ய முடியும். குறிப்பாக, மருத்துவம், பாதுகாப்பு துறை, வேளாண் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நவீன தொழில்நுட்பங்கள் தேவையாக உள்ளது. மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் அறிவியல் தொழில்நுட்பங்கள் வந்துள்ளது.

அறிவியல் கண்டுபிடிப்புகளின் தேவை, அவற்றின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு சொல்லும்படியாக நாட்டில் இல்லை. இதை ஊக்கப்படுத்தி அதிகப்படுத்தும் முயற்சியில் ஒன்றிய அரசு தீவிரம் காட்ட வேண்டும். மற்ற நாடுகளின் விஞ்ஞானிகள் ஆச்சரியப்படும் வகையில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து நமது விஞ்ஞானிகள் அசத்தி வருகின்றனர். மேலும், அறிவியலை ஊக்கப்படுத்தி தாராளமாக நிதி அறிவித்தால், உலக நாடுகளை மிஞ்சும் வகையில் கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க முடியும். விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் ஆராய்ச்சி நிதி நிறுத்தப்பட்டுள்ளதால், நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, இவ்விஷயத்தில் ஒன்றிய அரசு ஆராய்ச்சியின் நலன் கருதி நல்ல முடிவை உடனே எடுக்கும் என நம்புவோம்.

Related posts

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மளிகை கடை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு!!

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு ஆதரவு அளிப்பதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிவிப்பு!!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 818 கன அடியாக சரிவு..!!