மீட்பு பணிகள் துரிதம்

தமிழர்களுக்கு உலகின் எந்தவொரு மூலையிலும் பிரச்னை என்றால் ஓடோடி சென்று உதவுவதில் திராவிட மாடல் அரசை மிஞ்ச முடியாது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றாலும், அங்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் திரண்டு நிற்கின்றனர் என்றால், இந்த ஆட்சியின் நற்சாதனைகளை நாம் எடைபோட வேண்டிய அவசியமே இல்லை. இப்போது உத்தரகாண்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு ஓடோடி சென்று உதவுவதில் நம் அரசு இயந்திரங்கள், மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றன.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தை சேர்ந்த 30 தமிழர்கள் உத்தரகாண்ட் மாநிலம் ஆதிகைலாஷ் யாத்திரைக்கு சென்ற நிலையில், அங்கு நிலச்சரிவில் சிக்கித் தவித்தனர். தமிழக முதல்வர் உத்தரவின்பேரில் அரசு உயரதிகாரிகள், உத்தரகாண்ட் அரசை தொடர்பு கொண்டு, நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

முகாம் அலுவலகத்தில் இருந்த தமிழர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தமிழக முதல்வர், அவர்களின் அச்சத்தை போக்கியதோடு, தமிழகம் திரும்பிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட பயணிகள் டெல்லி வந்து, அங்கிருந்து விமானம் மூலம் தமிழகத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர். நிலச்சரிவு நடந்த தாவாகாட் என்னும் குக்கிராமம், செல்போன் டவர் எதுவும் இல்லாத கிராமம் என்பதால், அங்கு சிக்கியவர்களை மீட்க கடும் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மீட்கப்பட்டு முகாமிற்கு வந்தவர்கள் தமிழக முதல்வருக்கு நெஞ்சார நன்றி தெரிவித்துள்ளனர். உலகின் எந்தவொரு இடத்திலும் தமிழர்களுக்கு பிரச்னை என்றால், கடந்த 3 ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு அவர்களின் மீட்புக்கு வழிசெய்தே வந்துள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் தமிழக மாணவர்கள் வெளிநாடுகளில் சிக்கி தவித்தபோது, அவர்கள் யாதொரு சிரமமின்றி, தாயகம் திரும்ப இந்த அரசு நடவடிக்கை எடுத்தது. அதேபோல் உக்ரைன் போர் தொடங்கிய காலக்கட்டத்தில், ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழக மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப தமிழக அரசு மேற்ெகாண்ட துரித நடவடிக்கை பாராட்டுதலை பெற்றது.

கடந்தாண்டு இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற 4 மாணவியர்கள் உள்பட 12 பேரை மீட்கவும் தமிழக அரசு இயந்திர கதியில் இறங்கியது. ஒரு நல்லாட்சிக்கு அடையாளமே பொதுமக்களின் துயரங்களில் துணை நிற்பதுதான். அந்த வகையில் திராவிட மாடல் அரசு கடந்த 3 ஆண்டுகளில் தமிழர்களின் கண்களில் வழியும் நீரை துடைத்திட எப்போதுமே துணை நின்றுள்ளது. கடந்தாண்டு இறுதியில் இங்கு நடந்த பெருவெள்ளமாகட்டும், அண்டை மாநிலங்களில் நிகழ்ந்த நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களாகட்டும், போதுமே தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உற்ற தோழராக உதவிக்கரம் நீட்டியது.

அந்த வகையில் இப்போது உத்தரகாண்டில் சிக்கியுள்ள தமிழர்களும் நிலச்சரிவு அபாயங்களை கடந்து விரைவில் தமிழகம் திரும்ப உள்ளனர். அரசின் ஆலோசனைப்படி கடலூர் மாவட்ட நிர்வாகம், உத்தரகாண்ட் தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அடிக்கடி நிலவரத்தை கேட்டுக் கொண்டு வருகிறது. கடும் மலைப்பாதை, கணிக்க முடியாத வானிலை உள்ளிட்ட காரணங்களால் அவர்களை ஹெலிகாப்டர் மூலம் வெளியே கொண்டு வருவது தாமதமானாலும், தமிழர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் நிம்மதி அளிக்கிறது. மெச்சத்தகுந்த பணிகளை ஆற்றி வரும் அரசுக்கு நாமும் துணை நிற்போம்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை