சோழவரம் அருகே பாழடைந்து காணப்படும் தாய்சேய் சுகாதார கட்டிடம்: அகற்றி புதியதாக கட்ட கோரிக்கை

புழல்: சோழவரம் அருகே பயன்பாடின்றி பாழடைந்துள்ள தாய்சேய் சுகாதார கட்டிடத்தினை அகற்றி, புதியதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சோழவரம் அடுத்த ஆத்தூர் ஊராட்சி அலுவலகம் அருகே எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, தாய்சேய் நல விடுதி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, சில மாதங்களே செயல்பட்டது. நாளடைவில் பராமரிப்பில்லாததினால் கட்டிடம் பாழடைந்து காணப்படுகிறது. இதனால் பாம்புகள், விஷப் பூச்சிகள் அதிகளவில் நடமாட்டம் உள்ளது.

இக்கட்டிடம் பின்புறம் உள்ள வீடுகளில் வசிப்போரும் பாம்புகள் விஷப்பூச்சிகள் நடமாட்டத்தால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், சிலர் கட்டிடத்தின் பின்புறம் உள்ள இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே, பயன்பாடின்றி பாழடைந்து வரும் கட்டிடத்தை அகற்றி, புதிதாக கட்டிடம் கட்டி ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுத்தினால் ஆத்தூர், பழைய எருமை வெட்டிபாளையம், புது எருமை வெட்டிபாளையம், காரனோடை ஆகிய 4 ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் பயனடைவார்கள்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில்; ஆத்தூர், பழைய எருமை வெட்டிபாளையம், புது எருமை வெட்டிபாளையம், காரனோடை ஆகிய 4 ஊராட்சிகளில் சுமார் 15 ஆயிரத்து மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த, கிராமங்களில் உள்ள பொதுமக்கள் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டாலும், குறிப்பாக நிறைமாத கர்ப்பிணி பெண்களும் உரிய சிகிச்சை மேற்கொள்வதற்காக 7 கிலோமீட்டர் தூரமுள்ள பஞ்செட்டி ஆரம்ப சகாதார நிலையத்திற்கும், 5 கிலோ மீட்டர் தூரமுள்ள பூதூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் சென்று வருவதால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இதனால், அவசர சிகிச்சை பெறுவதற்கு செல்லும்போது உயிர்சேதம் ஏற்படுகிறது. எனவே, பயன்பாட்டில் இல்லாத ஆத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை அகற்றி, புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி