நத்தப்பேட்டை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை

வாலாஜாபாத்: நத்தப்பேட்டை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துமாறு பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். முத்தியால்பேட்டையில் இருந்து கலியனூர் வரை செல்லும் சாலையையொட்டி 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ளவர்கள் வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் எனில் நத்தப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து தான் செல்ல வேண்டும். மேலும் இந்த ரயில் நிலையத்தில் மேற்கூரை, கழிவறை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி நாள்தோறும் ரயில் பயணிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இவை மட்டுமின்றி இந்த ரயில் நிலையத்திற்கு நடைபாதையின் எதிர்ப்பகுதியில் தான் ரயில் நிலையத்திற்கு வரும் தார் சாலை அமைந்துள்ளது. இதேபோல் டிக்கெட் வாங்கும் கவுண்டரும் அதே பகுதியில் தான் அமைந்துள்ளது. ரயில் பயணிகள் டிக்கெட் கவுண்டரில் பயண டிக்கெட் வாங்கிக்கொண்டு ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து நடைபாதை பகுதியில் நிற்க வேண்டிய சூழல் நிலவுகின்றது. ஒரு சில நேரங்களில் ரயில் வரும் நேரத்தில் பயணிகள் வரும்போது விபத்து ஏற்படும் சூழல்களும் அரங்கேறுகின்றன. இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில், முத்தியால்பேட்டையை அடுத்த நத்தப்பேட்டை பகுதியில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி காணப்படுகிறது.

இதனால் கலியனூர், நத்தப்பேட்டை, முத்தியால்பேட்டை, அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த ரயில் நிலையத்தில் எதிர் பகுதியில் டிக்கெட் கவுண்டர்கள் அமைந்துள்ளதால் பயணிகள் டிக்கெட் பெறுவது என்பது பெரும் சவாலாக உள்ளது. மேலும் முதியவர்களும் இதுபோன்ற சூழ்நிலையில் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் ரயில்வே நிர்வாகம் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இங்குள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related posts

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு பாஜக பொருளாளர் ஆஜராக ஆணை

செல்போன் கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி?.. செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!

வரதட்சணை கொடுமை வழக்கில் 7 ஆண்டு சிறை..!!