மண்பாண்ட தொழிலாளர்களுக்கு உதவி தொகை வழங்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு : கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள டி.புத்தூர், பாழ்வாய்க்கால், சாத்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் 100க்கு மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மண்பாண்டம் செய்வதை பல தலைமுறைகளாக பாரம்பரியமாக செய்து வரும் இவர்கள் தற்போது பானை, விறகு அடுப்பு, சட்டி என பல்வேறு வடிவங்களில் மண்பாண்ட பொருட்களை கலை நயத்தோடு செய்து வருகின்றனர்.

இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், பாரம்பரிய மண்பாண்ட தொழில் வருங்காலத்தில் அழிந்து விடும் நிலையில் உள்ளது. தற்போது சிலர் மட்டுமே இத்தொழிலை செய்து வருகிறோம். மண்பாண்டங்களின் மகத்துவம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இத்தொழிலுக்கு எவ்விதமான நிபந்தனைகள் இன்றி மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்‌. மாதா மாதம் வாழ்வாதார உதவி தொகையாக ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

உற்பத்தி செய்யும் மண்பாண்ட பொருட்களை விற்பனை செய்வதற்காக அருகிலுள்ள நகரங்களில் அரசு கடை அமைத்து தர வேண்டும். மண்பாண்டங்களை ஏற்றுமதி செய்வதற்கு தொழிலாளர்களுக்கு போதிய பயிற்சி மற்றும் நிதியுதவி உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும். மேலும் நமது பாரம்பரிய மண்பாண்ட கலைஞர்கள் வளர்வதற்கு அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். மண்பாண்ட தொழிலில் உள்ள நடைமுறை சிக்கலை போக்கி அவர்களிடம் உள்ள கலைத்திறனை வெளி உலகத்திற்கு கொண்டுவர வேண்டும்.

சுமார் ஒரு கிலோ களிமண்ணில் ஓராயிரம் வடிவங்களை சிற்ப்பமாக்கி கலை நயமிக்க பொருட்களை செதுக்கும் திறன் பெற்றவர்கள் மண்பாண்ட தொழிலாளர்கள். தற்போது மாறிவிட்ட கலாசார மாறுபாட்டில் மண்பாண்டங்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்து வருகிறோம். அதனால் பல்வேறு தொல்லைகளையும் அனுபவித்து வருகிறோம். மண்பாண்ட தொழிலை ஊக்குவித்து வளர்ச்சி அடைய வைக்க வேண்டும். அதனால் அகல் விளக்கு, மண்பானை, பொம்மைகள், உள்ளிட்ட பல்வேறு கைவினை தொழில்களை செய்து வரும் கலைஞர்களையும், அவர்கள் குடும்பத்தையும் அரசு அரவணைத்து பாதுகாத்து வளர்ச்சியடைய வைக்க வேண்டும், என்றனர்.

Related posts

சாலையில் தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து: சென்னையில் பரபரப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது