குடியரசு தினவிழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு சென்னையில் 7,500 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு: மாநகரம் முழுவதும் 2 நாள் டிரோன்கள் பறக்க தடை; ஓட்டல், தங்கும் விடுதிகளில் விடிய விடிய சோதனை

சென்னை: குடியரசு தினவிழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு சென்னை முழுவதும் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மேற்பார்வையில் 7,500 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசு தின விழா நிகழ்ச்சி நடக்கும் மெரினா காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தலைமையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.ஏற்பாடுகளை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மேற்பார்வையில் மாநகர கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, அஸ்ரா கார்க், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் மற்றும் இணை கமிஷனர்கள் மற்றும் துணை கமிஷனர்கள் தலைமையில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 7,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சென்னை விமானநிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்கு இடமானோர் நடமாட்டம் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு சென்னை முழுவதும் போலீசார் ரோந்து வாகனங்கள் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளிமாவட்டங்களில் இருந்து சென்னையில் இணையும் பகுதிகளான மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், மீனம்பாக்கம், துரைப்பாக்கம், நீலாங்கரை ஆகிய இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

குடியரசு தின விழா நடைபெறும் மெரினா காமராஜர் சாலை முழுவதும் சென்னை பாதுகாப்பு பிரிவின் காவலர்கள் தலைமையில் வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழத்தல் பிரிவு, மோப்பநாய்கள் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கடற்கரை பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த காவலர்கள் படகுகள் மூலம் கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் சென்னையில் எந்த இடங்களிலும் டிரோன்கள் பறப்பதற்கு மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. தடையை மீறி யாரேனும் டிரோன்கள் பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

Related posts

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!