ரூ11 கோடியிலான அடமான நகைகள் கொள்ளை; வங்கி அதிகாரியின் கூட்டாளி மீதான குண்டர் சட்டம் ரத்து: உரிய ஆவணங்களை இணைக்காததால் உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தனியார் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட ரூ.11 கோடி மதிப்புள்ள 31 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த வழக்கில், பாலாஜி என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் அடமானம் பிடிக்கப்பட்ட சுமார் ரூ.11 கோடி மதிப்புள்ள 31 கிலோ தங்கத்தை ஒரு கும்பல் கொள்ளை அடித்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த அரும்பாக்கம் போலீசார், அந்த வங்கியில் மண்டல மேலாளராக பணியாற்றிய முருகன், அவரது கூட்டாளிகள் பாலாஜி, சந்தோஷ்குமார், சூர்யா, சந்தோஷ் குமாரின் உறவினரான அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ், கோவையை சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் வத்சன் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

பின்னர், முருகன், பாலாஜி, சந்தோஷ் குமார், சூரியா, செந்தில்குமார், வத்சன் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டார். இதையடுத்து, குண்டர் தடுப்பு தட்டத்தின்கீழ் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை எதிர்த்து, முருகன் உள்ளிட்டோர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.சுந்தர், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பாலாஜிக்கு எதிராக போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவில் பின்பற்ற வேண்டி ஆவணங்கள் முறையாக இணைக்கவில்லை. எனவே, அவருக்கு எதிராக போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மற்றவர்களது மனுக்கள் வரும் 17ம் தேதி விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.

Related posts

பிரதமர் மோடி வருவாரா.. மாட்டாரா..? ரயில்வே அதிகாரிகள், பாஜ நிர்வாகிகள் குழப்பம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியலின பேராசிரியைக்கு பதவி தர மறுப்பது சமூக அநீதி: துணைவேந்தருக்கு ராமதாஸ் கண்டனம்

யூடியூபர் சங்கர் மீதான குண்டர் சட்டத்தை உறுதி செய்தது அறிவுரை கழகம்