வாங்கிய 7 மாதத்தில் 3 முறை பழுது; ஷோரூம் முன் வாஷிங் மெஷினை எரிக்க முயன்ற பெண்: அண்ணாசாலையில் பரபரப்பு

சென்னை: வாங்கிய 7 மாதத்தில் 3 முறை பழுதானதால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர் வாஷிங்மெஷினை வாங்கிய தனியார் ஷோரூம் முன் சாலையில் மண்ணெண்ணெயை ஊற்றி எரிக்க முயன்றார். இந்த சம்பவத்தால் அண்ணாசாலையில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை திருவல்லிக்கேணி பல்லவன் சாலையை சேர்ந்தவர் லாவண்யா (27). இவர் அண்ணாசாலையில் உள்ள பிரபல தனியார் ஷோருமினில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ‘செமி ஆட்டோமெட்டிக் வாஷிங் மெஷின்’ ₹15 ஆயிரம் கொடுத்து வாங்கினார். வாங்கிய 7 மாதத்தில் 3 முறை பழுதாகியுள்ளது.

இதனால் வாங்கிய ஷோருமுக்கு திங்கள்கிழமை வாஷிங் மெஷினை தனது உறவுக்கார பெண்கள் 2 பேருடன் சென்று மேலாளரிடம் நடந்த சம்பவத்தை கூறி, புதிய வாஷிங் மெஷின் தர கோரி கோரிக்கை வைத்தனர். ஆனால் மேலாளர் புதிய மெஷின் தரமுடியாது, பழுதை மட்டும் சரிசெய்து தர முடியும் என்று கூறியுள்ளார். ஆனால் லாவண்யா மற்றும் அவரது உறவினர்கள் ஆகிய 3 பேரூம் புதிய மெஷின் தர வேண்டும் என்று கூறி, பழுதான வாஷிங் மெஷினை ஷோரூம் முன்பு சாலையில் வைத்து மண்ணெண்ணெணை ஊற்றி தீவைத்து கொளுத்த முயன்றனர். உடனே ஷோருமில் இருந்த மேலாளர் சம்பவம் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.

அதன்படி திருவல்லிக்கேணி காவல் நிலைய தலைமை காவலர் ஜெகநாதன் மற்றும் ஆயுதப்படை காவலர் ராம்குமாருடன் சம்பவ இடத்திற்கு சென்று வாஷிங் மெஷினை எரிக்க முயன்றவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் புதிய மெஷின் வேண்டும் என்று கூறி சாலையிலேயே பழுதான வாஷிங் மெஷினை வைத்துவிட்டு சென்று விட்டனர். இதனால் சிறிது நேரம் அண்ணாசாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

பிளஸ் 2 மாணவர்கள் திருமண வீடியோ விவகாரம்: 4 மாணவர்கள் சஸ்பெண்ட்

அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதித்த 3 ஆண்டு சிறை ரத்து: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே குப்பைத் தொட்டியில் பதுக்கி மது விற்ற 2 பேர் கைது!!