பழுதான பைக்காரா படகு இல்ல சாலை ரூ.3 கோடி மதிப்பீட்டில் சீரமைக்க நடவடிக்கை: வனத்துறை தகவல்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி – கூடலூர் சாலையில் சுமார் 22 கிமீ தொலைவில் பைக்காரா அணை அமைந்துள்ளது. வனப்பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த அணையில் உள்ள நீரை கொண்டு சிங்காராவில் நீர்மின் உற்பத்தி செய்யப்படுகிறது. பைக்காரா அணையில் இருந்து கடநாடு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கு குடிநீர் விநியோகமும் செய்யப்பட்டு வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் மற்றும் வனத்திற்கு நடுவே உள்ள இந்த அணையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுபாட்டில் உள்ள படகு இல்லம் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் வந்து ைபக்காரா அணையில் படகு சவாரி செய்வது வழக்கம். குறிப்பாக இங்கு இயக்கப்படும் தண்ணீரை கிழித்து கொண்டு சீறி பாயும் ஸ்பீட் படகில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். வழக்கமான நாட்களில் சுமார் 5 ஆயிரம் பேரும், வார இறுதி நாட்களில் சுமார் 10 ஆயிரம் பேரும் வருகின்றனர். சீசன் சமயங்களில் பன்மடங்கு அதிகரிக்கும். ஊட்டி – கூடலூர் பிரதான சாலையில் இருந்து சுமார் 2 கிமீ தூரம் வனப்பகுதி வழியாக பைக்காரா படகு இல்லத்துக்கு செல்லவேண்டும். இங்கு செல்ல கூடிய சாலையானது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

படகு இல்லம் செல்வதற்கு வனத்துறை மூலம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இச்சாலை, கடந்த பல மாதங்களாக மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத வகையில் உள்ளது. இதனால் அந்த வழியாக சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் தடுமாறிச்செல்கின்றன. பழுதடைந்து காணப்படுவதால் வாகனங்களின் டயர்களை பதம் பார்க்கும் நிலை உள்ளது. பழுது ஏற்பட்டால், அதனை சரிசெய்ய அங்கு எந்தவிதமான வசதிகளும் இல்லை. மிகவும் பழுதடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
குண்டும் குழியுமாக உள்ள இச்சாலையை சீரமைக்க வனத்துறை சார்பில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் தற்போது ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு பெறப்பட்டவுடன் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து நீலகிரி கோட்ட மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறியதாவது: வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலையை சீரமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு ரூ.3 கோடி நிதியை சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்ய கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. நிதி கிடைக்க பெற்றவுடன் சாலை சீரமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

தொடர் விபத்துக்கு பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு இல்லாததே காரணம்: மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை

திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை அக்டோபர் 2ஆம் தேதி போக்குவரத்து மாற்றம்