கிழக்கு தாம்பரம் – மேற்கு தாம்பரம் இடையே புதுப்பிக்கப்பட்ட சுரங்க நடைபாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

தாம்பரம்: கிழக்கு தாம்பரம் – மேற்கு தாம்பரம் இடையே பொதுமக்கள் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதை தவிர்க்க, ரூ.3.85 கோடி செலவில் சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டு, கடந்த 2019ம் ஆண்டு, மார்ச் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. ஆனால் அந்த சுரங்க நடைபாதைக்கு செல்ல வேண்டுமென்றால் தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து ஜிஎஸ்டி சாலையில் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையின் எதிரே ஜிஎஸ்டி சாலையை கடந்து, பின்னர் மீண்டும் அரை கிலோமீட்டர் நடந்தால் மட்டுமே சுரங்க நடைபாதைக்கு செல்ல முடியும். இதனால் பொதுமக்கள் சுரங்க நடைபாதையை பயன்படுத்தாமல், ஜிஎஸ்டி சாலை நடுவே உள்ள சென்டர் மீடியனில் ஏறி குதித்தும், தண்டவாளத்தை கடந்தும் சென்று வந்தனர். இவ்வாறு பொதுமக்கள் சென்று வந்தபோது ரயில் மற்றும் சாலைகளில் செல்லும் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. மேலும், பொதுமக்கள் சுரங்க நடைபாதையை பயன்படுத்தாமல் இருந்ததால், முறையாக பராமரிக்கப்படாமல் கிடந்தது. அதில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் பழுதாகியும், சேதமடைந்தும் இருந்தது. இதை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் நடைபெற்று வந்தது.

எனவே, ரயில்வே சுரங்க நடைபாதையை பராமரிக்கும் பொறுப்பை ரயில்வே துறை, தாம்பரம் மாநகராட்சி இடம் ஒப்படைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை அடுத்து ரயில்வே நிர்வாகம் சமீபத்தில் ரயில்வே சுரங்க நடைபாதையில் சேதமடைந்திருந்து மின்விளக்குகளை சீரமைத்து பராமரிப்பு பணிகளை மாநகராட்சி சார்பில், மேற்கொள்ளலாம் என அனுமதி வழங்கியது.
இதனைத்தொடர்ந்து சுரங்க நடைபாதையின் இருபுறமும் தாம்பரம் மாநகராட்சி சார்பில் கிரில் கேட் அமைக்கப்பட்டு சுரங்க நடைபாதை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, சுரங்க நடைபாதை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா கலந்துகொண்டு சுரங்க நடைபாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்த சுரங்க நடைபாதை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு பின்னர் மீண்டும் இரவு 7 மணிக்கு மூடப்படும் எனவும், தாம்பரம் காவல் நிலைய போலீசார் தினமும் காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் சுரங்க நடைபாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டு குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிக்க இருப்பதாகவும் போலீசார் தரப்பில் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவிடம் உறுதியளித்தனர். மேலும் தாம்பரம் மாநகராட்சி சார்பில் சுரங்க நடைபாதை முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரி உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், மண்டல குழு தலைவர்கள் எஸ்.இந்திரன், டி.காமராஜ், மாமன்ற உறுப்பினர் ஜோதி குமார், தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன், ஆய்வாளர் சார்லஸ், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை