ரூ.50 கோடி வரை பணபரிமாற்றம் விவகாரம் கட்டுமான அதிபர் மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அமலாக்கத்துறை சோதனைக்கு உள்ளான பிரபல கட்டுமான தொழிலதிபர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல கட்டுமான நிறுவனமான ஓசேன் லைப் ஸ்பேஷஸ் நிறுவனத்தை எஸ்.கே பீட்டர் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் ஒன்றாக இணைந்து தொடங்கினர். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், நிறுவனத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கை ஸ்ரீராம், எஸ்.கே பீட்டரிடம் கேட்டதாகவும் இதற்கு எஸ்.கே பீட்டர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து எஸ்.கே.பீட்டர் மீது ஸ்ரீராம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின்படி எஸ்.கே.பீட்டர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

இதில் சுமார் ரூ..50 கோடி வரை பணபரிமாற்றம் நடத்ததாக புகார் எழுந்த நிலையில், இதை அடிப்படையாக வைத்து சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதா? என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டுமான நிறுவன அதிபர் எஸ்.கே.பீட்டர் நிறுவனம் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தி வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், தங்களுக்கிடையே சமசரம் ஆகிவிட்டதால் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.கே.பீட்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பின் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.பிரகாஷ், வழக்கறிஞர்கள் கமலக்கண்ணன், ஜெயசுதா ஆகியோர் ஆஜராகி, இரு நிறுவனங்களுக்கிடையே சமரசம் ஆகிவிட்டதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். சமரசம் தொடர்பாக ஸ்ரீராம் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Related posts

“நான் முதல்வன்” என இயம்பக் கேட்டிடும் ‘இந்நாள்!’ :ஜேஇஇ தேர்வில் சாதித்த மாணவர்களை மேற்கோள்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீராக உள்ளது: சபாநாயகர் அப்பாவு நாகர்கோவிலில் பேட்டி

அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை வரும் 17ம் தேதி தென்காசியில் இருந்து தொடங்குவதாக சசிகலா அறிவிப்பு!!