Sunday, June 30, 2024
Home » பெண்களே! பிங்க் அக்டோபரை நினைவில் கொள்ளுங்கள்!

பெண்களே! பிங்க் அக்டோபரை நினைவில் கொள்ளுங்கள்!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

கடந்த 90 ஆண்டுகளாக ஒவ்வொரு அக்டோபரிலும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் இளஞ்சிவப்பு நிறத்தை ஏற்றுக்கொண்டு, தற்போது உலகளவில் பொதுவாகக் கண்டறியப்பட்ட புற்றுநோயான மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான தடுப்பு மற்றும் வழக்கமான பரிசோதனையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பிங்க் நிற ரிப்பனை காட்டுவதால் இது ‘பிங்க் அக்டோபர்’என்று அழைக்கப்படுகிறது.

உலக அளவில் மகளிருக்கு ஏற்படும்‌ புற்றுநோய்களில்‌ கர்ப்பப்பை புற்று நோய்க்கு அடுத்து அதிகம்‌ தோன்றுவது மார்பகப்‌ புற்றுநோய்தான்‌. இதன் ஆரம்ப கால அறிகுறிகளை
பெரும்பாலும் பெண்கள் கவனிப்பதில்லை. மார்பகப்‌ புற்றுநோயின்‌ அறிகுறிகள்‌ வெளிப்படையாகத்‌ தெரியும்‌ முன்னரே, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால்‌ முழுமையாக குணப்படுத்த முடியும்‌ என்கிறார் புற்றுநோய் நிபுணர் டாக்டர் ராஜ்குமார்.

மார்பகங்களில் புற்றுநோய் செல்கள் உருவாகி அதிக அளவில் வளர்ச்சி அடையும் போது அது புற்றுநோயாக மாறுகிறது. மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு மட்டும் இல்லை அரிதாக ஆண்களுக்கும் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகளில் கூறியுள்ளனர். பெரும்பாலும் 50 வயதில் உள்ளவர்களுக்குத்தான் மார்பக புற்றுநோய் தாக்கும். ஆனால் இன்றைய சூழலில் 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கும் இந்த நோயின் பாதிப்பு ஏற்படுகிறது.

முக்கிய காரணங்கள்‌

மார்பக புற்றுநோய் ஏற்பட குறிப்பிட்ட சில காரணங்களை சொல்ல முடியாது என்றாலும், சிலவற்றை கணிக்க முடியும்.

* மகப்பேறு இல்லாத பெண்கள்‌
* குழந்தைக்கு தாய்ப்பால்‌ புகட்டாத தாய்மார்கள்‌
* கர்ப்பத்தடை மாத்திரை உபயோகிப்பவர்கள்‌
* நெருங்கிய உறவினர்கள்‌ யாருக்கேனும்‌ இந்நோய்‌ இருந்தால்‌
* இளம்‌ வயதிலேயே பூப்படைதல்‌
* காலம்‌ தாழ்த்தி மாதவிடாய்‌ நிற்பது
* உடல் பருமன்.

மார்பில்‌ உண்டாகும்‌ அனைத்து கட்டிகளும்‌ புற்றுநோயாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதே சமயம் கட்டிகள் தென்பட்டால் அவை மிகச்சிறிய அளவில் இருக்கும்போதே மருத்துவரை அணுகி அதற்கான பரிசோதனையை மேற்கொள்வது அவசியம்.

அறிகுறிகள்‌

* மார்பகங்களில்‌ உள்ள கட்டியின் அளவு திடீரென்று அதிகரித்தல்.
* கட்டி இருக்கும் இடத்தில் வலி இருக்கும். கட்டி வலியுடன்‌/ வலியில்லாது இருத்தல்‌.
* மார்பகங்களில்‌ வலி
* மார்பகக் காம்புகள்‌ உள்நோக்கி அமுங்கி இருப்பது.
* மார்பக சருமத்தில் ஏற்படும் மாற்றம்.
* மார்புக்‌ காம்புகளில்‌ நீர்‌ கசிவு
* அக்குள்‌ மற்றும்‌ கழுத்துப் பகுதிகளில்‌ கட்டி/வீக்கம்‌
* மார்பகங்கள் இரண்டின் அளவு மற்றும் வடிவத்தில் மாற்றம்.
* மார்புக் காம்புகளைச் சுற்றிலும் தடிப்புகள் போன்று இருத்தல்.

இது போன்ற அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனைகள் செய்வது அவசியம்.

மார்பக புற்றுநோய்‌ கண்டறியும்‌ முறைகள்‌

மார்பக புற்றுநோய்‌ ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டால்‌ முற்றிலுமாகக்‌ குணப்படுத்த முடியும்‌. இதனை பல்வேறு முறைகளில் கண்டறியலாம். புற்று நோய்‌ நன்கு வளர்ந்து அதன்‌ அறிகுறிகள்‌ வெளிப்படையாகத்‌ தெரியும்‌ வரை காத்திருக்காமல், முன்பே பரிசோதனை செய்வதன் மூலம் ஆரம்பகட்ட நிலையிலேயே அதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொண்டால், இந்நோயிலிருந்து முற்றிலும்‌ குணமடைய முடியும்‌. மார்பகப்‌ புற்றுநோய்க்‌ கட்டிகள்‌ பெரிய அளவில் வலிகளை ஏற்படுத்தாது என்பதால், அதனை சில பரிசோதனை முறைகளில் ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும்.

* மருத்துவ ஆய்வுக்கு முன் பெண்களே சுய பரிசோதனை செய்து கொள்ளலாம்.
* மார்பக அமைப்பில் மாற்றம் உள்ளதா என்பதை கைகளை தூக்கி கண்ணாடி முன் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
* இடது கையை தலையின்‌ பின்புறம்‌ தூக்கியபடி வலது கையால்‌ இடது மார்பகத்தின் மேல் மற்றும் கீழ் பகுதியில் சோதனை செய்தால், அங்கு கட்டி உள்ளதா என்று கண்டறிய முடியும். அதே போல் அக்குள் பகுதியில் ஆய்வு செய்யலாம்.
* மார்புக் காம்புகளில் திரவம் கசிகிறதா என்றும் சோதனை செய்யலாம்.
* மருத்துவ ரீதியாக மோமோகிராபி சோதனை மூலம் கண்டறியலாம்.
* மார்பகத்தில் உள்ள கட்டிகளை பயாப்ஸி சோதனை செய்வதன் மூலம் கண்டறிய முடியும்.
* சிடி ஸ்கேன் செய்தும் மார்பக புற்றுநோயை கண்டறியலாம்.

கண்டறிந்த பிறகு அதன் அளவு, எந்த நிலையில் இருக்கிறது என்பதை பொருத்து சிகிச்சை முறைகள் மாறுபடும். குறிப்பாக மோமோகிராபி பத்தாண்டுகளுக்கு பிறகு வரும் மார்பக புற்றுநோய் அபாயத்தை கணிக்க உதவும்.

கடைபிடிக்கப்படும் சிகிச்சை முறைகள்

நோயின்‌ தன்மையை பொறுத்து சிகிச்சை முறை மாறுபடும்‌. பொதுவாக மார்பகப்‌ புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு, கீமோதெரபி மூன்றும்‌ பயன்படுத்தப்படுகிறது.
ஆரம்ப நிலையில்‌ அறுவை சிகிச்சையும்‌ கீமோதெரபியும்‌ சேர்த்து அளிக்கப்படும்‌. நோய்‌ சற்று முற்றிய நிலையில்‌ இவைகளோடு கதிர்வீச்சு சிகிச்சையும்‌ சேர்த்து கொடுக்கப்
படும்.

மார்பகப் புற்று நோய் பரவும்‌ விதம்‌…

* நோய்‌ தோன்றிய இடத்திலிருந்து சுற்றியுள்ள இடங்களுக்கு நேரடியாக பரவும்.
* நிணநீர்க்‌ குழாய்‌ (Lymphatic) மூலமும்‌ புற்றுநோய் செல்கள் பரவும்.
* ரத்த ஓட்டம்‌ மூலமாகவும்‌ பரவுகிறது.
* இந்நோய்‌ முற்றிய நிலையில்‌, அக்குள்‌ பகுதியில்‌ உள்ள நிணநீர்‌ முடிச்சுகள்‌, தோல்‌, எலும்பு, நுரையீரல்‌, கல்லீரல்‌, மூளை ஆகிய உறுப்புகளை பாதிக்கிறது.
* பரவிய நிலையில்‌ இந்நோயை குணப்படுத்துவது கடினம்‌.

மார்பக புற்றுநோய்‌ கண்டறியப்பட்டால்‌ செய்ய வேண்டியவை

* மருத்துவரிடம்‌ தவறாமல்‌ முறையாக ஆலோசனை பெறுவதை தவிர்க்கக் கூடாது.
* மருத்துவரிடம்‌ உங்கள்‌ உடலிலும்‌, மனதிலும்‌ ஏற்படும்‌ மாற்றங்கள் குறித்து வெளிப்படையாக பேசவேண்டும்.
* சத்தான சமச்சீர்‌ உணவை உட்கொள்ளுதல்‌ அவசியம். பதப்படுத்தப்பட்ட மற்றும் மசாலா அதிகம் உள்ள உணவை தவிர்க்க வேண்டும்.
* அதிக பருமனோடு இருப்பின்‌ முறையாக உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்ேகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
* புகைபிடித்தல்‌, போதை பொருட்களை உட்கொள்ளுதல்‌ மற்றும்‌ மது அருந்துதலை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
* நச்சுத்தன்மை வாய்ந்த புகை மற்றும்‌ கெமிக்கல்களிலிருந்து உங்களை பாதுகாத்தல் அவசியம் என்று ஆலோசனை வழங்கினார் டாக்டர் ராஜ்குமார்.

மாநிலம் தோறும் மகிழ்விக்கும் நவராத்திரி

ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரியின், முதல் மூன்று தினம் பராசக்தி, அடுத்த மூன்று தினங்கள் மகாலட்சுமி, கடைசி மூன்று தினங்கள் சரஸ்வதிக்கு அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த 9 நாட்கள் கொலுப்படிகள் வைப்பது சிறப்பு. படிகளில் கடவுளின் பொம்மைகள் மட்டுமில்லாமல், அவரால் படைக்கப்பட்ட பிராணிகள், தாவரங்கள் என அனைத்தும் இடம் பெறும். இதன் தத்துவம் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்தும் சமம் என்பதுதான்.அண்டை அயலாரை எந்தவித பேதமின்றி அழைத்து உறவாடி வரும் ஒரே பண்டிகை நவராத்திரிதான். இது பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

*தென்நாட்டில் கன்யா பூஜை என்று கொண்டாடப்படுகிறது. சிறு குழந்தைகளை அழைத்து, புத்தாடை அணிவித்து, அறுசுவை உணவளித்து பூஜிப்பது வழக்கம்.

*வங்காளத்தில் பார்வதி தேவி கணவன் வீட்டிலிருந்து பிறந்த வீடு வருவதாக ஐதீகம். நவராத்திரியின் போது, பெண்கள் பிறந்த வீடு செல்வது வழக்கம். அவர்களுக்கு
புத்தாடைகள், வளையல்களை பெற்றோர்கள் சீராக அளிப்பது வழக்கம்.

*குஜராத்தில் ‘அம்பாஜி’ என்று அழைக்கப்படுகிறது. 9 நாட்களும் பூஜித்து கடைசி நாளன்று ‘கர்பா’ நடனத்துடன் கோவில் செல்கிறார்கள்.

*மகாராஷ்டிரத்தில் நவதானியங்களை மண்பானையில் பயிரிட்டு, நவராத்திரியின் பத்தாவது நாள், பாலிகைகளை ஆற்று நீரில் கரைப்பார்கள். இதற்கு பெயர் ‘காகர் புங்க்னே.’

*கர்நாடகத்தில் தசரா என்ற பெயருடன் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தேவியை ‘சாமுண்டீஸ்வரி’யாக வணங்குகிறார்கள்.

*மைசூரில் தசரா விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். மைசூரை ஆண்ட ராஜா வம்சத்தினர் யானை மேல் அம்பாரியில் ஊர் முழுக்க வலம் வருவர். பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

*நவராத்திரி பூஜை வெவ்வேறு மாநிலத்தில் அவர்களின் பாரம்பரிய முறைப்படி மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்த நவராத்திரியை நாமெல்லாம் மகிழ்வுடன் கொண்டாடலாமே!

– சரோஜா ரங்கராஜன், சென்னை.

தொகுப்பு: தி. ஜெனிஃபா

You may also like

Leave a Comment

three × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi