ரெமல் புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையால் மணிப்பூரில் நிலச்சரிவு ஏற்பட்டு லாரி கவிழ்ந்து விபத்து

இம்பால்: ரெமல் புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையால் மணிப்பூரில் இம்பால் – ஜிரிபாம் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு கனரக லாரி கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. ரெமல் புயல் காரணமாக வடகிழக்கு மாநிலங்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. குறிப்பாக அசாம், மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இம்பால் – ஜிரிபாம் சாலையில் உள்ள பள்ளத்தாக்கில் லாரி சரிந்து விழும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தொடர் கனமழையால் அப்பகுதியில் நிலச்சரிவு, மண்சரிவு ஏற்பட்டுள்ளது. லாரி கவிழ்ந்ததன் காரணமாக சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் லாரி கவிழ்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் பெய்து வரும் இஅடைவிடாத கனமழையால் அதிகப்படியான வெள்ளம், போக்குவரத்து இடையூறு மற்றும் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இம்பால் பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது