புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5வது நாளாக 20 லாரிகளில் நிவாரணப் பொருட்கள்: அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னையில் கனமழை பெய்து பாதிக்கப்பட்ட வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை 5வது நாளாக நேற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். மிக்ஜாம் புயல் காரணமாக, வரலாறு காணாத அளவில், தொடர்ந்து பெய்த கனமழையினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பாதிப்புக்குள்ளான வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளுக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை தொடர்ந்து 5வது நாளாக நேற்றும் வழங்கினார்.

சென்னை, வேளச்சேரியில் கக்கன் நகர், சாஸ்திரி நகர், சசி நகர் ஏரிக்கரை, பவானி நகர், தமிழ்நாடு வீட்டுவசதி காலனி, அம்பேத்கர் நகர், மடிப்பாக்கத்தில் நகர், எல்.ஐ.சி.நகர், லட்சுமி நகர் வார்டு-188, பாலாஜி நகர், பள்ளிக்கரணையில் வள்ளல் பாரி நகர், பாண்டியன் நகர், பசும்பொன் நகர், நகர் வார்டு-190 ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அமைச்சர் நேரடியாக சென்று, அரை லிட்டர் பால் பாக்கெட் 8000, பிஸ்கட் 16,000, சுவீட் பன் 5000, சேமியா, ரவா 500, கோதுமை 5500, அரிசி 5 கிலோ பேக் 3000, அரிசி 4 கிலோ பேக் 500, அரிசி 2 கிலோ பேக் 7500, வாட்டர் பாட்டில் 1000, கைலி 10000, போர்வை 14000, டவல் 3800, சேலை 1500, நைட்டி 3500, குழந்தைகள் துணி 500, பாய் 5000 மற்றும் மருந்து பொருட்கள் அடங்கிய தொகுப்பு 9000 ஆகிய நிவாரணப் பொருட்கள், சுமார் 20 லாரிகளில் கொண்டு சென்று நேரில் வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பிரதீப் யாதவ், பொதுப்பணித்துறை செயலாளர் சந்தரமோகன், வேளச்சேரி மண்டல பொறுப்பாளர் சுப்புலெட்சுமி, நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர்கள் சந்திரசேகர், பாலமுருகன் மற்றும் முருகேசன், பொதுப்பணித்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்