நிவாரண நிதி வழங்க காலம் கடத்தும் ஒன்றிய அரசுக்கு தமிழக மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தண்டையார்பேட்டை: தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் காலம் கடத்தி வரும் ஒன்றிய அரசுக்கு, வரும் மே மாதம் மக்கள் பாடம் புகட்டுவார்கள், என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், கிறிஸ்துவ மக்கள் 2200 பேருக்கு புத்தாடை, கேக், அரிசி, பிரியாணி செய்யும் பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி, அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில், பிராட்வே டான்போஸ்கோ பள்ளியில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு நலத்திட்ட உதவி மற்றும் நிதி உதவி வழங்கி, பேசியதாவது:
அனைத்து மதத்தினரும் பிறப்பால் சமம். சென்னையில் புயல் மழையால் ஒரே நாளில் 48 செ.மீ. மழை பெய்தது.

மக்கள் பாதிக்கப்பட்டனர். நாங்கள் வீட்டுக்குள் ஒளிந்து கொள்ளவில்லை. மக்களுக்கு உதவிட மக்களோடு மக்களாக களத்தில் இறங்கி செயல்பட்டோம். சென்னை புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், தென் மாவட்டங்களில் பெரும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சேர்த்து தமிழக அரசு, ஒன்றிய அரசிடம் ரூ.21 ஆயிரத்து 700 கோடி நிதி கேட்டால், ரூ.450 கோடி மட்டுமே கொடுத்தனர். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு குஜராத்தில் புயலால் பாதிக்கப்பட்டபோது அடுத்த நாளே ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கினார்.

ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் வழங்க மறுக்கிறார்கள். தமிழக மக்கள் இதனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வரும் மே மாதம் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில், ஒன்றிய பாஜ அரசுக்கு பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், துறைமுகம் பகுதி செயலாளர்கள் ராஜசேகர், முரளி, மண்டல குழு தலைவர் ராமுலு, மாமன்ற உறுப்பினர்கள் பரிமளம், ஆசாத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் லோகேஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜெகதீசன், பங்கு தந்தைகள், பாதிரியார்கள், கிறிஸ்துவ மக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்