சென்னையை பெரு வெள்ளத்திலிருந்து காப்பாற்றி உள்ளோம் தகுதியுள்ள அத்தனை பேருக்கும் ரூ.6,000 நிவாரணநிதி வழங்கப்படும்: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: சென்னையை பெரு வெள்ளத்தில் இருந்து காப்பாற்றி உள்ளோம். தகுதியுள்ள அத்தனை பேருக்கும் ரூ.6,000 நிவாரண தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி கூறினார்.திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், அம்பத்தூர் மண்டல குழுத் தலைவருமான பி.கே.மூர்த்தி- ஷீலா தம்பதியரின் மகனும் அரசு வழக்கறிஞருமான அபிஷேக் மூர்த்திக்கும், மணிமாறன்-இந்திரா தம்பதியரின் மகள் டாக்டர் மனோதர்ஷ்னிக்கும் எழும்பூர் ராணி மெய்யம்மை ஹாலில் நேற்று திருமணம் நடந்தது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.அப்போது, அவர் பேசியதாவது:

அண்மையில் பெய்த மழை கிட்டதட்ட 47 வருடங்களாகப் பார்க்க முடியாத, வரலாறு காணாத அளவிற்கு பெய்திருக்கக்கூடிய மழை. அந்த மழை வருவதற்கு 4 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை செய்தார்கள். ஆனால் எச்சரிக்கை செய்தது எல்லாம் மீறி இதுவரை 47 வருடங்களாக பார்க்காத மழையை பார்த்தோம். எப்போதும், திமுகவை பொறுத்தவரைக்கும் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி மக்களுக்காகப் பாடுபடக்கூடிய கட்சி. நாம் பலமுறை ஆட்சியில் இருந்திருக்கிறோம். பலமுறை ஆட்சியில் இல்லாமல் இருந்திருக்கிறோம். ஆட்சியில் இருக்கும் போது இப்படிப்பட்ட பேரிடரைச் சந்தித்திருக்கிறோம். ஆட்சியில் இல்லாத நேரத்தில் சந்தித்திருக்கிறோம்.

ஏற்கனவே, 2015ம் ஆண்டு ஒரு வெள்ளம் வந்தது. அப்போது செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் அனுமதி கேட்கக்கூட அதிகாரிகள் பயந்தார்கள். அதைவிட மோசமான நிலையில், வரலாற்றிலேயே காணமுடியாத இந்தச் சூழ்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை நிரம்ப விடாமல், கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீரைத் திறந்துவிட்டு, சென்னை சந்திக்க இருந்த ஒரு பெரும் வெள்ளத்திலிருந்து மீட்ட அரசுதான் திராவிட மாடல் அரசு.

இப்போது வந்த மழையில் அரசு வரிந்துகட்டிக் கொண்டு முனைப்போடு, பல நலத் திட்ட உதவிகளை, நிவாரணப் பணிகளில் எப்படியெல்லாம் ஈடுபட்டது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அதற்கு ஈடாக நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட கட்சி எது என்றால், அது நம்முடைய கட்சி. அதனால் தான் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.சென்னையைப் பொறுத்தவரையில் முழுமையாகவும், சென்னையை ஒட்டியுள்ள, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் யார் பாதிக்கப்பட்டிருந்தாலும் அத்தனை பேருக்கும் நிச்சயமாக, உறுதியாக 6,000 ரூபாய் வழங்கப்படும்.

எப்படி மகளிர் உரிமைத் தொகையை தகுதியுள்ளவர்கள் அத்தனை பேருக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவித்து, அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோமோ, அதேபோல இந்த 6,000 ரூபாய் தகுதியுள்ள அத்தனை பேருக்கும் நிச்சயமாக, உறுதியாக வழங்கப்படும். ஒன்றிய அரசிடமிருந்து ஒரு குழு வந்திருக்கிறது. மூன்று நாட்களாக ஆய்வு செய்து கொண்டிருக்கக்கூடிய அதிகாரிகள் கூட, இந்த வெள்ள சேதத்தை மிக மர்த்தியமாகத் தமிழ்நாடு அரசு கையாண்டிருக்கிறது. அரசியல் ரீதியாக ஒன்றிய அரசோடு எவ்வளவோ பிரச்னைகள் இருக்கலாம்.

ஆனால் அதையெல்லாம் மறந்து ஒன்றிய அரசிடமிருந்து வந்து இங்கே ஆய்வு செய்திருக்கக்கூடிய அதிகாரிகள் அத்தனை பேரும் தமிழ்நாடு அரசை மனதாரப் பாராட்டியிருக்கும் செய்தியை நாம் பார்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் ஜோசப் சாமுவேல், தாயகம் கவி, இ.பரந்தாமன், துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப.ரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு