ஓய்ந்தது ஜனநாயக திருவிழா

நாடாளுமன்ற தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இந்த தேர்தல், அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க நினைப்பவர்களுக்கும், அதை பாதுகாக்க விரும்புகிறவர்களுக்கும் இடையிலான சித்தாந்த போர் என ராகுல்காந்தி வர்ணித்தார். இடத்துக்கு ஏற்றாற்போல் வியூகத்தை அமைத்துக்கொண்டது பாஜ. வழக்கம்போல் இந்துத்துவ அஸ்திரத்தை பல தருணங்களில் பயன்படுத்தியது. தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலத்திலேயே குடியுரிமை திருத்த சட்டத்தின்படி மேற்கு வங்கம், அரியானா, உத்தரகாண்ட் மாநிலங்களில் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது.

இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி தலைவர்களான ராகுல், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு பெரும் கூட்டம் கூடியதை, யாராலும் மறைத்துவிட முடியவில்லை. அத்துடன், பணம் மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி தொடங்கி தேர்தல் பத்திர விவகாரம், அக்னிபாத் திட்டம் வரை பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி தலைவர்கள் சுவாரஸ்யமாக பிரசாரம் செய்துள்ளனர். விவசாயிகளின் தொடர் போராட்டம், குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக அளித்த உறுதிமொழியை பாஜ நிறைவேற்றாதது உள்ளிட்ட காரணங்களால் பாஜவுக்கு வடக்கில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது.

காங்கிரசுடன் டெல்லியில் கூட்டணி, பஞ்சாபில் எதிர்த்து போட்டி என ஆம் ஆத்மி கட்சி விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தாலும், “தேசத்தை காப்பாற்ற இது அவசியம்” என்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். எந்தெந்த இடங்களில் பாஜவை வீழ்த்துவது அவசியமோ, அங்கெல்லாம் காங்கிரசுடன் கைகோர்த்துள்ளோம் எனவும் விளக்கம் அளித்துள்ளார். காஷ்மீரில் மொத்தம் உள்ள 5 தொகுதிகளில் நகர், அனந்த்நாக்-ரஜோரி, பாராமுல்லா என 3 முக்கிய தொகுதிகளில் பாஜ போட்டியிடவில்லை. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் நடக்கும் இந்த முக்கிய தேர்தலில், பிரதமர் மோடி அங்கு பிரசாரத்துக்கே செல்லவில்லை.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர், பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தன்னாட்சி உரிமையை வழங்கும் 6வது அட்டவணையை அமல்படுத்த வேண்டும் என போராடும் லடாக் பகுதிகளிலும் மோடி பிரசாரம் மேற்கொள்ளவில்லை. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்கு உரியவரும், அவரது அரசியல் வாரிசாக கருதப்படுபவருமான வி.கே.பாண்டியன் – ஒரு தமிழர் என்கிற அடிப்படையிலேயே மோடியும், அமித்ஷாவும் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். நவீன் பட்நாயக்கின் உடல்நிலை மோசமடைந்ததன் பின்னணியில் வி.கே.பாண்டியன் இருப்பதாக மறைமுகமாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். பொதுவாக அதிர்ந்து பேசாத நவீன் பட்நாயக், “பொய் சொல்வதற்கும் ஓர் அளவு இருக்கிறது” என்று பிரதமரை கண்டிக்கும் அளவுக்கு விவகாரம் முற்றியது. இதுவும், பாஜவுக்கு எதிர்ப்பாகவே அமைந்தது.

கடந்த 2014, 2019 தேர்தல்களில் தனது வாரணாசி தொகுதியில் ஒருமுறைகூட தங்காத பிரதமர் மோடி, இம்முறை 2 நாட்கள் தங்கியதும், அங்கு பாஜவின் முக்கிய தலைவர்கள் குவிக்கப்பட்டதும் கவனிக்கத்தக்கது. தனது சொந்த தொகுதியிலேயே மோடி நம்பிக்கையில்லாமல் இருக்கிறார் என காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கிண்டல் செய்துள்ளன. நான், பயோலாஜிக்கல் பிறவி அல்ல, கடவுளால் அனுப்பப்பட்டவர் என கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி, ஜனநாயக திருவிழா நிறைவுபெறும் நாளில், அனைத்து எதிர்ப்புகளையும் மீறி, தவமிருக்க தமிழகத்தின் குமரிமுனைக்கு வந்துள்ளார். ‘மனதின் குரல்’ என்னவென்று வரும் ஜூன் 4ல் தெரிந்துவிடும்.

Related posts

தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை பணிநீக்கம் செய்யாதது ஏன் : உயர்நீதிமன்றம் கேள்வி

ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் அழைப்பு

நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்