பல்லடத்தில் படுகொலை செய்யப்பட்ட 4 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைப்பு

திருப்பூர்: பல்லடத்தில் படுகொலை செய்யப்பட்ட 4 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (49). இவர் தவிடு புண்ணாக்கு வியாபாரம் செய்து வந்தார். பொங்கலூர் மேற்கு ஒன்றியம் மாதப்பூர் பஞ்சாயத்து பாஜ கிளை தலைவராகவும் இருந்தார். இவரது நிலத்தில் நேற்று முன்தினம் இரவு 3 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களை மோகன்ராஜ் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் மோகன்ராஜின் வீட்டிற்கு சென்று, மோகன்ராஜ், அவரது பெரியப்பா மகனான செந்தில்குமார், தாய் புஷ்பவதி (68), சித்தி ரத்தினாம்பாள் (59) ஆகிய 4 பேரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர். 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்லடம் போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே உடலை வாங்க மறுத்த உறவினர்களின் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது. இதனைடுத்து இறந்தவர்களின் உறவினர்களோடு காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து கொலை செய்யப்பட்ட 4 பேரின் உடலை வாங்க உறவினர்கள் ஒப்புக்கொண்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் 4 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உடல்கள் பல்லடம் அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து 4 மணிக்கு நல்லடக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related posts

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் வசூலிக்கும் கட்டணத்தை சரிபார்க்க நிர்ணயக்குழுவுக்கு தடையில்லை: ஐகோர்ட் உத்தரவு

தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடிய தபால்கள் மின்னணு மயமாக்கல் திட்டம்: தமிழ்நாடு அரசு தகவல்

வளி மண்டல சுழற்சி 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு