நான்கரை ஆண்டுகள் யாரால் ஆட்சி செய்தார்? என்னை அழிக்க எடப்பாடி சதி செய்தார்: உண்மையை ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடும் ஓபிஎஸ்

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜ கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிடுகிறார். நேற்று பரமக்குடி சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், எம்பிக்கள் ரவீந்திரநாத், தர்மர் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: கடந்த 2017ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பணியாற்ற நிர்பந்திக்கப்பட்டேன். அப்போது துணை முதல்வர் பதவி தருவதாக கூறினார்கள். ஆனால், அந்த பதவியில் எனக்கு விருப்பமில்லை.

அந்த பதவியில் எந்த அதிகாரமும் இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால், மோடியின் வற்புறுத்தல் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் துணை முதல்வர் பதவியை ஏற்று கொண்டேன். ஆனால் எனது அரசியல் வாழ்வை அழிக்க எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சிலர் தொடர்ந்து சதி செய்தனர். இதனால் தான் அதிமுகவை மீட்க தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தேசிய அளவில் ஒரு கூட்டணியை அமைத்தார். தனக்கு வலது புறத்தில் எடப்பாடி பழனிசாமியை உட்கார வைத்தார். ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் இருந்து வாபஸ் பெற்றார்.

எதற்காக வாபஸ் பெறுகிறீர்கள் என கேட்டதற்கு காரணம் கூறவில்லை. துரோகத்தை செய்து விட்டு கொஞ்சம் கூட நன்றி இல்லாமல் விலகினார். எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டுகள் யாரால் ஆட்சி செய்தார் என்பது எனக்கு தெரியும். அப்போது தமிழக அமைச்சர்கள் எப்படி எல்லாம் பேசி திட்டங்களை பெற்று வந்தார்கள் என்பது எனக்கு தெரியும். இதற்கு கொஞ்சம் கூட நன்றி வேண்டாமா? இவ்வாறு பேசினார். பாஜவில் ஆதரவு இல்லாமல்தான் நான்கரை ஆண்டுகள் அதிமுக ஆட்சி நடந்ததாக எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் கூறி வந்தனர். தற்போது, பாஜ ஆதரவில்தான் நான்கரை ஆண்டுகள் அதிமுக ஆட்சி நடந்தது என்று ஓபிஎஸ் மறைமுகமாக கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

சதுரகிரி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்