அமைச்சர் பொன்முடி பேச்சு சித்தா பல்கலைக்கு ஆளுநர் ஒப்புதல் தராதது வருத்தம்

சென்னை: தமிழ்நாட்டில் சித்தா பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதாவை முதல்வர் நிறைவேற்றியும், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் வைத்திருப்பது வருத்தத்தை அளிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், தேசிய மருத்துவ தாவர வாரியம் சார்பில் மருத்துவ தாவரங்களின் முக்கியத்துவம் மற்றும் கல்விசார் அமைப்புகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த 2 நாள் தேசிய கருத்தரங்கை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

பிறகு அவர் பேசியதாவது: தற்போது, மூலிகைகள் எல்லாம் அழிந்து போய் கொண்டு உள்ளது. எல்லா பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தோட்டங்கள், மரங்கள் நட வேண்டும் என்றும், நெடுஞ்சாலைகளில் சாலை போடுவதற்காக மரங்கள் வெட்டப்பட்டாலும் அதை திரும்ப நட வேண்டும் எனவும் முதல்வர் கூறி இருக்கிறார். கல்வி வளர்ச்சியோடு இயற்கை மற்றும் தாவரம் மீதான பற்று வளர்ச்சி வேண்டும்.

படிப்பு புத்தகத்தை படிப்பது மட்டுமல்ல, பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் என்பது போன்ற பல்வேறு திட்டங்களில் வளர்ச்சி திராவிட மாடல் அரசுதான். தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் உருவாக்க பல்வேறு முயற்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். சித்தா பல்கலை அமைக்கும் மசோதா நிறைவேற்றியும், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் வைத்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது. பொறியியல் படிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் பாடத்தில் மூலிகை தாவரம் குறித்த பாடம் அறிமுகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

Related posts

மணிப்பூரில் தொடரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது: பிரதமர் மோடி உரை

விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

ஆட்குறைப்பில் இறங்கிய பிரபல ‘அனகாடமி’ கல்வி தொழில்நுட்ப நிறுவனம்: 250 ஊழியர்களை திடீரென பணி நீக்கம்