மாநிலங்களுக்கு தர மறுப்பு 4 லட்சம் டன் கோதுமை 5 லட்சம் டன் அரிசி ஏலம்: மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறது ஒன்றிய அரசு

புதுடெல்லி: மாநிலங்களுக்கு உணவு தானியங்களை விற்பனை செய்ய மறுத்த ஒன்றிய அரசு, சில்லறை விலையை குறைக்க உதவுவதாக கூறி ஏலத்தில் 4 லட்சம் டன் கோதுமை, 5 லட்சம் டன் அரிசி வியாபாரிகளுக்கு விற்க நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் அரிசி, கோதுமை விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து ஜூன் 12ம் தேதி நடந்த ஒன்றிய அரசு துறை செயலாளர்கள் கூட்டத்தில் ஒன்றிய தொகுப்பில் இருந்து மாநில அரசுகளுக்கு அரிசி, கோதுமை விற்பனை ஜூலை மாதத்தில் நிறுத்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் மொத்த வியாபாரிகளுக்கு அரிசி, கோதுமையை விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் அடிப்படையில் முதற்கட்டமாக 4 லட்சம் டன் கோதுமை, 5 லட்சம் டன் அரிசியை விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்திய உணவுக் கழகம் மூலம் ஜூன் 28ல் கோதுமையும், ஜூலை 5ல் அரிசிக்கான மின்-ஏலம் நடக்கிறது. இதற்கான டெண்டர் விரைவில் விடப்படும்.

இதுதொடர்பாக இந்திய உணவு கழக தலைவரும் நிர்வாக இயக்குநருமான அசோக் கே மீனா கூறுகையில்,‘‘விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய தொகுப்பில் இருந்து 15 லட்சம் டன் கோதுமை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. கோதுமைக்கான டெண்டர் இன்று(நேற்று) வெளியிடப்பட்டது. 4 லட்சம் டன் கோதுமை விற்பனைக்கான முதல் சுற்று ஏலம் ஜூன் 28ம் தேதி நடைபெறும். 5 லட்சம் டன் அரிசிக்கான ஏலம் ஜூலை 5ம் தேதி நடைபெறும். ஒரு வியாபாரிக்கு அதிகபட்சமாக 100 டன் வழங்கப்படும். சிறிய வியாபாரிகளுக்கு 10 டன் வழங்கப்படும். கோதுமை 100 கிலோ ரூ.2,150 ஆகவும், அரிசி 100 கிலோ ரூ.3100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உண்மையான வர்த்தகர்களை அடையாளம் காண எப்எஸ்எஸ்ஏஐ( FSSAI ) உரிமமும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

மாவட்டத்தில் இன்று முதல் 16 நாட்களுக்கு தூய்மையே சேவை விழிப்புணர்வு வாரம் கடைபிடிப்பு

மதுரையில் தனியார் மகளிர் விடுதியில் தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்வு!!

போலி பத்திரப்பதிவை தடுக்க கூடுதல் பாதுகாப்புடன் ரேகை பதிவு