செங்காந்தளுக்கு இப்படியும் ஒரு சிறப்பு இருக்கு!

செங்காந்தள் மலரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தமிழ்நாட்டின் மாநில மலர் என்றால் அது செங்காந்தள்தான். பச்சை மரகதத்தில் சிவப்பு நிற ரத்தினக் கற்களை பதித்தது போல் கண்களைக் கவரும் தாவரம்தான் செங்காந்தள். தொன்மை வாய்ந்த இந்த மலரைப் பற்றிய தகவல்களும், உவமைகளும் சங்ககால இலக்கியங்களில் பொதிந்து கிடக்கின்றன. பார்ப்பதற்கு அழகாக காட்சி தரும் இந்தச் செடி, விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரும் ஒரு பயிராகவும் விளங்குகிறது. இந்தச் செடியில் கிடைக்கும் விதையை ஒரு கற்பகத்தருவாகவே கருதுகிறார்கள் விவசாயிகள். திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இந்தப் பயிர் முக்கியமான பணப்பயிராகவே விளங்குகிறது. செங்காந்தள் சாகுபடியில் அனுபவம் மிக்கவரும், மூலனூர் பேரூராட்சி தலைவருமான தண்டபாணியைச் சந்தித்து, சாகுபடி விபரங்கள் குறித்து கேட்டோம்.

“திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், மூலனூர், கன்னிவாடி உள்ளிட்ட பகுதிகளிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளிமந்தயம், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது சுமார் 6000 ஏக்கர் பரப்பில் “குளோரியாசோ சூப்பர் பா” என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட கண்வலிக் கிழங்குச்செடி பயிரிடப்பட்டு இருக்கிறது. ஒருமுறை பயிரிட்டால் 5 வருடங்கள் பலன் தரும். இதனால் இந்தப்பகுதிகளில் இதைப் பலர் ஆர்வமாக பயிரிடுகிறார்கள்’’ என கண்வலிக்கிழங்குக்கு ஒரு சிறு அறிமுகம் கொடுத்த தண்டபாணி, அதன் சாகுபடி விபரத்தை அடுக்கினார்.

`ஆடி மாதம் மழை பெய்யும் காலத்தில் கண்வலிக் கிழங்கை நடவு செய்ய வேண்டும். அப்படி நடவு செய்தால் அடுத்த ஒரு வருடத்தில் பூ பூத்து காய் வெடிக்க ஆரம்பித்துவிடும். இந்த காய்களானது ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 300 கிலோ வரை கண்வலி விதைகளை கொடுக்கும். இந்த விதைகளை விதைத்த நாட்களில் இருந்து காய் விடும் பருவம் வரை அதற்கு தேவையான பராமரிப்பைக் கொடுக்க வேண்டும். இது தவிர போதுமான காற்றோட்டம் இருந்தால் மட்டுமே தன் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு காய்ப்புத்திறன் அதிகரிக்கும். போதுமான காற்று வீசவில்லை என்றால் கூலிக்கு ஆட்களை வைத்து ஒரு பூவில் உள்ள சூல் தண்டை கொண்டு குறைந்தபட்சம் 10 பூக்களுக்கு செயற்கையான மகரந்த சேர்க்கை ஏற்படுத்தி காய்ப்புத் திறனை கொண்டு வர வேண்டும்.

வருடம் முழுக்க பாடுபட்டால் மட்டுமே அதிக மகசூல் கிடைக்கும், அதன்படி ஒரு கிலோ கண்வலி விதையை குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்தால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோ கண்வலி விதை 4,000 ரூபாய் முதல் 4500 வரை விற்பனையாகி இருக்கிறது. குறிப்பாக திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் விளைவிக்கப்படும் இந்த கண் வலி விதை இயற்கையாகவே தரமான விதையாக கிடைத்து வருகிறது. இந்த விதையின் மூலம் உயிர் காக்கும் மருத்துவப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதய நோய், நுரையீரல் அலர்ஜி, விஷப் பாம்புகள், பூச்சிகள் கடித்தால் அதற்கான மருந்துகள் என உயிர்காக்கும் மருந்தாக கண் வலி விதைகள் உருமாற்றம் செய்யப்படுகின்றன. இதற்காக ஜெர்மன், இத்தாலி போன்ற வெளிநாடுகள் மற்றும் மும்பையில் முகாமிட்டு கரூர் மூலனூர், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் ஏஜென்சிகள் மூலம் கிராமப் பகுதிகளில் கண்வலி விதையை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து அதிக லாபம் பெற்று வருகின்றனர். இடைத்தரகர்களின் இது போன்ற செயலால் வருடம் முழுவதும் பாடுபட்ட விவசாயிக்கு உரிய பலன் கிடைப்பதில்லை, எனவே கண் வலி விதையை மதிப்புக்கூட்டப்பட்ட மருத்துவப் பொருளாக மருந்து தயாரிக்கும் தாவரமாக அறிவிக்க வேண்டும்.

இதற்கு ஒன்றிய அரசு கண்வலி விதையை மருந்து தயாரிப்புக்கான மூலப் பொருளாக அங்கீகாரம் தர வேண்டும். இப்படி தந்தால் தமிழக அரசு பருத்தி, எள், நிலக்கடலை, மக்காச்சோளம் போன்றவற்றை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் கொள்முதல் செய்வது போல் செய்தால், இடைத்தரகர்களின் இடையூறுகள் ஏதுமின்றி விவசாயிகளுக்கு நேரடியாக முழு லாபமும் கிடைக்கும். இதுகுறித்து கண்வலி மருத்துவச் செடி சாகுபடியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசை தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்தபோது ஒன்றிய அரசு கண் வலி விதையை மருத்துவப் பொருளாக அங்கீகாரம் கொடுத்தால் தமிழ்நாடு அரசு அதை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு நிகர லாபம் கிடைக்கச் செய்வதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. எனவே, ஒன்றிய அரசின் அனுமதியை பெற வேண்டும் என பதிலளித்துள்ளனர். இந்நிலையில் மதிப்புக்கூட்டு மருத்துவப் பொருளான கண்வலி விதையை தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு நேரடியாக அனுப்பலாம். இதனால் அந்நிய செலாவணியை அதிகரிக்கலாம்’’ என்கிறார்.

Related posts

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு