செஞ்சிலுவைச் சங்கங்களும் செயல்பாடுகளும்

பள்ளிகளில் ஜூனியர் ரெட் கிராஸ் மற்றும் கல்லூரிகளில் யூத் ரெட் கிராஸ் போன்ற அமைப்புகள் சிறப்பாகச் செயலாற்றிவருகின்றன. இந்த அமைப்புகளைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்னர் தாய்ச்சங்கமான செஞ்சிலுவைச் சங்கம் தோன்றிய வரலாற்றை நாம் அறிந்துகொள்வது முக்கியம்.

ஒரு போர்க்களத்தில் உருவானதுதான் இந்த செஞ்சிலுவைச் சங்கம். ஆம் 1859 இல் இத்தாலியில் சால்பெரினா என்கிற ஊரில் கடும்போர் நடந்தது. பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் ஆஸ்திரியா அரசர் பிரான்சிஸ் ஜோசப்பும் மோதினர். பல்லாயிரம் பேர் உயிரிழந்தனர். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்தனர். தண்ணீர் கேட்டுத் தவித்தனர். உதவி செய்யப் போர்க்களத்தில் எவருமில்லை.

கொடுமையைக் கண்டு வருந்திய ஹென்றி டுனான்ட் என்கிற வங்கி முதலாளி தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுத்தார். பலரைத் துணைக்குச் சேர்த்து வீரர்களுக்கு மருந்திட்டார். இந்நிகழ்வு செஞ்சிலுவைச் சங்கம் என்கின்ற சர்வதேச சங்கம் உருவாகக் காரணமாகியது. இந்நிகழ்ச்சியில் நெகிழ்ந்த ஹென்றி டுனான்ட் நூலொன்று எழுதி இதுபோல போரில் காயம் படுவோரை காக்க இயக்கம் ஒன்று அவசிய, அவசர தேவை எனக் குறிப்பிட்டார். இந்தப் புத்தகம் வெளிவந்து ஓராண்டுக்கு பின்னர் டுனான்ட் -இன் ஆலோசனைகள் கொண்டு ஜெனிவாவில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டு முடிவுகளின்படி 1864 ஆம் ஆண்டு செஞ்சிலுவைச் சங்கம் என்கிற அமைப்பு உருவானது.

செஞ்சிலுவைச் சங்கத்தை உலகிற்கு தந்த நாட்டைக் கெளரவப்படுத்தும் வகையில் சுவிஸ் நாட்டின் தேசியக் கொடியின் தலைகீழ் மாற்றம் செய்து இயக்கத்தின் பெயர் மற்றும் சின்னம் அமைக்கப்பெற்றது. சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம்/ செம்பிறைச் சங்கம் உலகின் மிகப்பெரிய கட்டமைப்பாகும். போரில் காயமடைந்தோருக்கு பாகுபாடின்றி மருத்துவம் செய்தல், கைதிகளை உரியவரிடம் ஒப்படைத்தல் இதன் தொடக்க கால நோக்கங்கள். பின்னர் போர் இல்லாத அமைதியான காலத்தில் உடல்நலம் பேணுதல் என்பது மிக முக்கிய குறிக்கோளாக ஆனது.

சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் 190 நாடுகளில் 97 மில்லியன் தன்னார்வலர்களை உறுப்பினர்களாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய மனிதாபிமான இயக்கமாகும். கடந்த 150 ஆண்டுகளில் செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியானது போர்களில் காயமடைந்தவர்கள் மற்றும் போர்க் கைதிகளைக் கவனிப்பது, மருத்துவப் பராமரிப்பு, ரத்ததானம், முதலுதவி போன்ற பல்வேறு பணிகளைச் செவ்வனே செயலாற்றி வருகிறது.

செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏழு அடிப்படைக் கொள்கைகள்

மனிதநேயம், பாரபட்சமற்ற தன்மை, நடுவுநிலைமை, சுதந்திரம், தன்னார்வ சேவை, ஒற்றுமை மற்றும் உலகளாவிய பார்வை என்பதாகும்.

இந்திய செஞ்சிலுவைச் சங்கம் (I R C S):

இது நாடு முழுவதும் 2100க்கு மேற்பட்ட கிளைகளைக் கொண்ட தன்னார்வ மனிதாபிமான அமைப்பாகும். பேரிடர் மற்றும் அவசர காலங்களில் நிவாரணம் அளிப்பது மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் மற்றும் சமூகங்களில் ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பு மேம்படுத்துவது முக்கிய நோக்கங்கள் ஆகும். இந்தியாவின் மாண்புமிகு குடியரசுத் தலைவர் மற்றும் மாண்புமிகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இந்த சங்கத்தின் தலைவர்கள் ஆவர்.துணைத் தலைவர் நிர்வாகக் குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் தேசிய நிர்வாகக் குழு 18 உறுப்பினர்களைக் கொண்டதாகும். பொதுச் செயலாளர் சங்கத்தின் தலைமை நிர்வாகி ஆவார்.

சின்னம்: வெள்ளை பின்னணியில் செஞ்சிலுவை என்பது சங்கத்தின் ஒரு சின்னமாகும் .செம்பிறை (இஸ்லாமிய நாடுகளிலும்) ரெட் கிரிஸ்டல் ஆகியவையும் செஞ்சிலுவைச் சங்கப் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சின்னங்கள் ஆகும்.

யூத் ரெட் கிராஸ் (YRC): கல்லூரிகளில் இந்த அமைப்பு செயல்படுத்தப்படுகிறது செஞ்சிலுவைச் சங்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் பற்றிய புரிதலை மேம்படுத்த, இளைஞர்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்த, சுகாதாரத்தை மேம்படுத்த, முதலுதவி ஆகியவற்றில் திறனை வலுப்படுத்த இந்த அமைப்பு செயலாற்றி வருகிறது. 18 முதல் 25 வயது வரையிலான மாணவர்களைக் கொண்ட இந்த இயக்கத்தில் பயிற்சி பெற்ற கல்லூரிப் பேராசிரியர் மாணவர்களை வழி நடத்துவார்.

ஜூனியர் ரெட் கிராஸ்(JRC): பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவை நோக்கத்தை இளம் வயதிலேயே ஏற்படுத்துவதற்காக ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. பள்ளித் தலைமை ஆசிரியர் மேற்பார்வையில் சேவை செய்வதில் ஈடுபாடு உடைய ஆசிரியரை கன்வீனராகக்கொண்டு இந்த குழு செயல்பட்டுவருகிறது. இக்குழுக்களில் ஈடுபாடு உடைய மாணவர்கள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுகின்றனர்.

யூத் மற்றும் ஜூனியர் ரெட் கிராஸின் நோக்கங்கள்:

ஆரோக்கியம்,சேவை,நட்பு என்பதே யூத் மற்றும் ஜூனியர் ரெட் கிராஸின் நோக்கமாகும். உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்: அனைத்து நாடுகளிலும் மே 8-ம் தேதி ஆண்டுதோறும் இந்த உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. நோபல் பரிசு பெற்றவரும் செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவியவருமான ஹென்றி டுனான்ட் பிறந்த நாளை( மே 8 1828) 1948ஆம் ஆண்டிலிருந்து செஞ்சிலுவை நாளாக உலகம் முழுவதும் கொண்டாடி வருகிறோம்.

பள்ளி கல்லூரிகளில் ரெட் கிராஸின் செயல்பாடுகள்

ரத்ததான முகாம் நடத்துதல், மருத்துவ முகாம் நடத்துதல், கண்சிகிச்சை முகாம் நடத்துதல், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம், முதலுதவி முகாம், பேரிடர் கால விழிப்புணர்வு முகாம், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம், மத்திய மாநில அரசுகளின் சுகாதாரத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களிடம் கொண்டு செல்லுதல், காயமடைந்தோருக்கு நோய்வாய்ப் பட்டோருக்கு முதலுதவி வழங்குதல், பேரிடர் காலங் களில் நிவாரணப் பணி மேற்கொள்ளல், செஞ்சிலுவைச் சங்க கொள்கைகளை பொதுமக்களிடம் பரப்புதல், நட்புறவை வளர்த்தல், மாநிலத் தேசிய ஒருங்கிணைப்பு முகாம்களில் பங்கேற்றல், எய்ட்ஸ் கொரோனா போன்ற நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல் மற்றும் நலத்திட்ட உதவிகளை அவர்களுக்கு வழங்குவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று உதவுதல் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி மேற்கொள்ளுதல், செஞ்சிலுவைத் தினம், ஜெனிவா ஒப்பந்த தினம், சர்வதேச ரத்த தானதினம், தேசிய ரத்ததான தினம், சர்வதேசத் தன்னார்வலர்கள் தினம், சர்வதேச முதலுதவி தினம், சர்வதேச ஆரோக்கிய தினம், சர்வதேசப் போதைப்பொருள் ஒழிப்புத் தினம், சர்வதேச மனிதாபிமான தினம், சர்வதேச அமைதி தினம் போன்ற நாட்களில் பொருத்தமான செயல்பாடுகள் மேற்கொள்ளுதல் போன்றவைதான் பள்ளி கல்லூரிகளில் ரெட் கிராஸின் செயல்பாடுகள்.

தன்னாட்டவர்க்கு மட்டுமின்றி எந்நாட்டவர்க்கும் தொண்டு செய்யும் உலகளாவிய பார்வையை, மனித நேயத்தை இளம் பிராயத்தில் வளர்த்தெடுக்கும் செஞ்சிலுவைச் சங்கத்தைப் பள்ளி கல்லூரிகளில் அமைத்திடுவோம். நாளும் நற்தொண்டாற்றுவோம்.

Related posts

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் 9வது ஐசிசி மகளிர் டி.20 உலக கோப்பை நாளை தொடக்கம்

ஜெய்ஸ்வால்,சுப்மன்கில் எதிர்கால நட்சத்திரங்கள் : அஸ்வின் பேட்டி