90 அடி ஆழத்தில் மண்ணுக்குள் புதைந்த நாகர்கோவில் தொழிலாளியின் உடல் 50 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு

திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞத்தில் கிணற்றை சுத்தப்படுத்தும் போது 90 அடி ஆழத்தில் மண்ணுக்குள் புதைந்த நாகர்கோவிலை சேர்ந்த தொழிலாளியின் உடல் 50 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது. நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜன் (55). கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு தொழில் தேடிச் சென்றார். வெங்காணூரில் கூலித்தொழில் செய்து வந்ததார். அப்போது அங்கேயே திருமணம் செய்து குடியேறினார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், பபிதா, சபிதா என்ற 2 மகள்களும் உள்ளனர்.

இதற்கிடையே கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மகாராஜன் கிணறு வெட்டுவது மற்றும் கிணறு சுத்தப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் விழிஞ்ஞம் அருகே உள்ள முக்கோலை பகுதியை சேர்ந்த சுகுமாரன் வீட்டுக் கிணற்றை சுத்தப்படுத்துவதற்காக சென்றார். அவருடன் வெங்காணூர் பகுதியைச் சேர்ந்த சேகர், கண்ணன் மோகன், மணிகண்டன் ஆகிய 4 தொழிலாளர்களும் பணிக்கு சென்றனர். மிகவும் குறுகிய 90 அடி ஆழம் கொண்ட அந்த கிணறு 30 வருடங்களுக்கு முன்பு தோண்டப்பட்டதாகும். கிணற்றை சுத்தப்படுத்துவதற்கு முன்பு மோட்டார், உபகரணங்களை வெளியே எடுப்பதற்காக மகாராஜன் கிணற்றுக்குள் இறங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக மேல் பகுதியில் இருந்து கான்கிரீட் வளையங்கள் மண்ணுடன் சேர்ந்து மகாராஜனின் மேல் விழுந்தது.

இதில் மற்ற 4 தொழிலாளர்களும் அதிர்ஷ்டவசமாக தப்பினர். மகாராஜன் மட்டும் 90 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டார். இது குறித்து அறிந்ததும் விழிஞ்ஞம் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்தனர். ஆனால் அவர்களாலும் மகாராஜனை மீட்க முடியவில்லை. நேற்று முன்தினமும், நேற்றும் கடுமையாக முயற்சித்தும் மகாராஜனை மீட்க முடியவில்லை.இதற்கிடையே நேற்று பூயப்பள்ளியை சேர்ந்த தொழிலாளர்கள் 80 அடி ஆழத்தில் இறங்கிப் பார்த்ததில் மகாராஜனின் கை மட்டும் தெரிந்தது. ஆனால் அவரது அருகே செல்ல முடியவில்லை. நேற்று இரவு வரை முயற்சித்தும் அவரை மீட்க முடியவில்லை. இதற்கிடையே ஆலப்புழாவில் இருந்து 25 பேர் அடங்கிய பேரிடர் மீட்புப் படையினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை முதல் மீண்டும் மீட்புப் பணி மீண்டும் தொடங்கியது. போலீசார், தீயணைப்பு வீரர்கள், தொழிலாளர்கள் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் ஆகியோர் அனைவரும் சேர்ந்து மகாராஜனை மீட்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் 50 மணி நேர போராட்டத்தின் முடிவில் மகாராஜனை இறந்த நிலையில் தான் மீட்க முடிந்தது. மகாராஜனின் மேல் 15 அடிக்கு மேல் மண் விழுந்ததாலும், நீர் ஊற்று அதிகமாக இருந்ததாலும், கிணற்றின் அகலம் மிகவும் குறைவாக இருந்ததும்தான் மகாராஜனை உயிருடன் மீட்க முடியாமல் போனது என்று தீயணைப்புத்துறை அதிகாரி தெரிவித்தார்.

Related posts

ஆந்திராவில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது

மதுரை திருமங்கலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி

சதுரகிரி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்