திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.62.50 கோடி மதிப்பீட்டிலான சொத்துக்கள் மீட்பு

சென்னை: திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.62.50 கோடி மதிப்பீட்டிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில் களுக்குச் சொந்தமான சொத்துக்களைj ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இன்று (24.07.2023) சென்னை, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.2.50 கோடி மதிப்பீட்டிலான கடைகள் மற்றும் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் வட்டம், மொடச்சூர், தான்தோன்றியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்பீட்டிலான மனை மற்றும் நிலங்கள் மீட்கப்பட்டு திருக்கோயில்கள் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

சென்னை, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இதில் வணிக பயன்பாட்டிற்கு விடப்பட்டிருந்தது. 4 கடைகளின் வாடகைதாரர்கள் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமலும், உள்வாடகைக்கும் விட்டிருந்தார்கள். வாடகைதாரர்கள் மீது சென்னை மண்டல இணை ஆணையர் நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு 78 -ன் படி வழக்கு தொடரப்பட்டு, அதன் உத்தரவுப்படி சென்னை மாவட்ட உதவி ஆணையர் எம்.பாஸ்கரன் முன்னிலையில் வருவாய் மற்றும் காவல்துறை உதவியுடன் பூட்டி சீலிடப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.2.50 கோடியாகும்.

அதேபோல், ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் வட்டம், மொடச்சூர், தான்தோன்றியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான 2,695 சதுரடி நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஈரோடு இணை ஆணையர் நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு 78 -ன் படியும், அதே திருக்கோயிலுக்கு சொந்தமான 4.57 ஏக்கர் புன்செய் நிலம் தொடர்பாக வருவாய் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படியும் ஈரோடு உதவி ஆணையர் திரு.எம்.அன்னக்கொடி அவர்கள் முன்னிலையில் வருவாய் மற்றும் காவல்துறை உதவியுடன் சொத்துக்கள் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.60 கோடியாகும். ஆகமொத்தம் இரு திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.62.50 கோடி மதிப்பீட்டிலான சொத்துக்கள் இன்று திருக்கோயில்கள் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுகளின்போது, வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) திருமதி கௌசல்யா, திருக்கோயில் செயல் அலுவலர்கள் திரு.ம.சக்திவேல், திரு.ஸ்ரீதர், ஆய்வாளர்கள் திருமதி ராஜலட்சுமி, திரு.ஹரி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Related posts

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை