பரங்கிமலையில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.200 கோடி அரசு நிலம் மீட்பு: வணிக கட்டிடம் இடிக்கப்பட்டது

சென்னை: பரங்கிமலையில் நேற்று முன்தினம் ரூ.500 கோடி மதிப்பிலான அரசு நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், நேற்று ரூ.200 கோடி நிலம் மீட்கப்பட்டு, அங்கிருந்த வணிக கட்டிடம் இடிக்கப்பட்டது. பரங்கிமலை பட்ரோடு பூந்தமல்லி சாலையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு, சர்வே எண் 437ல், 26 ஆயிரத்து 32 சதுர அடி அரசு நிலத்தை குத்தகைக்கு எடுத்து, குடியிருப்புடன் வசித்து வந்தவர், குத்தகை காலம் முடிந்த பின்னரும், நிலத்தை அரசுக்கு ஒப்படைக்காமல், வணிக நோக்கில் பயன்படுத்த முயற்சிப்பதாக செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத்துக்கு புகார்கள் வந்தன.

இதனையடுத்து அவரது உத்தரவின்பேரில், பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் மற்றும் ஊழியர்கள் நேற்று, ஆக்கிரமிப்பு நிலத்தை, போலீஸ் பாதுகாப்புடன் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், அங்கிருந்த வணிக கட்டிடம் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தள்ளப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மவுண்ட் – பூந்தமல்லி சாலை பட்ரோடு பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு ஏக்கர் 11,047 சதுர அடி நிலத்தை, நேற்று முன்தினம் வருவாய் துறை அதிகாரிகள் மீட்ட நிலையில், 2வது நாளாக நேற்று ரூ.200 கோடி மதிப்பிலான 26 ஆயிரத்து 32 சதுர அடி நிலம் மீட்கப்பட்டுள்ளது.

இதுவரை ரூ.3000 கோடி மதிப்பு நிலம் மீட்பு: பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் கூறுகையில், ‘‘பரங்கிமலை பட்ரோடு பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில், சிலர் குத்தகை காலம் முடிந்த பின்னரும், அந்த நிலங்களை மீண்டும் அரசிடம் ஒப்படைக்காமலும், குத்தகை பணமோ, வாடகையோ செலுத்தாமல், வணிக நோக்கில் கட்டிடங்களை கட்டி பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து, அங்கிருந்த 30க்கும் மேற்பட்ட கடைகளுக்கு கடந்த 2ம் தேதி சீல் வைக்கப்பட்டு, ரூ.1000 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டது.

அதை தொடர்ந்து, பரங்கிமலையில் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான அரசு நிலம் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது. தற்போது ரூ.200 கோடி அரசு நிலத்தை மீட்டுள்ளோம். பரங்கிமலை பட்ரோட்டில் இதுவரை குத்தகை காலம் முடிந்தும் ஒப்படைக்காமல் இருந்த சுமார் ரூ.3000 கோடி மதிப்புள்ள அரசு நிலங்கள் மீட்கப்பட்டு, கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. சில கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர் பகுதியிலும் ஆக்கிரமிப்பு இடங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும்,’’ என்றார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது