காரணம் சமூக நீதி

ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவையற்ற சங்கதிகள் என்றார் அண்ணா. இப்படி அவர் சொன்னதற்கு காரணம் உண்டு. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்களை கொண்ட அரசு இருந்தது. அந்த அரசை கண்காணிக்க ஆளுநர் என்ற ஒருவரை ஆங்கிலேயே அரசு நியமித்தது. அது மட்டுமன்றி இந்தியா முழுமைக்கும் கவர்னர் ஜெனரல் என்றும் ஒருவர் நியமிக்கப்பட்டார். இவர்கள், இந்தியர்களின் அரசை கண்காணித்து அதிகாரத்தில் மூக்கை நுழைப்பதை பணியாக வைத்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக நாடு சுதந்திரம் பெற்ற பிறகும், ஒன்றிய அரசின் சார்பில் தங்கள் பிரதிநிதிகளாக, மாநிலங்களில் கவர்னர்களை நியமிக்கும் வழக்கம் தொடர்கிறது. இந்த வகையிலான கவர்னர்

பதவி தேவையில்லாத ஒன்று என்பதையே தனக்கே உரிய பாணியில் சொன்னார் அண்ணா. அண்ணாவின் கருத்து கடந்த சில ஆண்டுகளாக, ஒரு சில மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகளால் மெய்ப்பட்டுள்ளது. அதிலும் ஒன்றிய அரசு, தான் சார்ந்த கட்சிக்கு உரிய அங்கீகாரம் இல்லாத மாநிலங்களில் தனது ஏஜெண்டுகளாகவே கவர்னர்களை வைத்துள்ளது. தற்போதைய தமிழ்நாடு, கேரளா, ெதலங்கானா, பஞ்சாப் மாநில கவர்னர்கள், இதற்கான சாட்சியங்களாக நம்மிடையே உலா வந்து கொண்டிருக்கின்றனர். மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாலமாய் இருக்க வேண்டிய இவர்கள், முன்னேற்றத்திற்கு தடையாகும் முட்டுக்கற்களாக வரிந்து கட்டி நிற்கின்றனர் என்பதற்கான ஆதாரங்கள் ஏராளம்.

குறிப்பாக மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் மக்கள் முன்னேற்றம் சார்ந்த மசோதாக்களை கிடப்பில் போடுவதுதான் இவர்களின் தலையாய பணியாக உள்ளது. இந்தப்பூனைகளுக்கு மணிகட்டுவது யார்? என்று அனைவரும் தயங்கிநின்ற போது, கம்பீரமாக நீதியின் கதவுகளை தட்டியது தமிழ்நாடு அரசு. இதையடுத்து உச்ச நீதிமன்றம் போட்ட சூட்டால் விழித்துக் கொண்ட கவர்னர், பத்து மசோதாக்களை அவசரமாக சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்பினார். இதை லாவகமாக எதிர்கொண்டு சிறப்பு பேரவை கூட்டத்தை கண்ணியத்துடன் நடத்தி முடித்துள்ளார் நமது முதல்வர். தமிழ்நிலத்தின் மேம்பாட்டை குறிக்கோளாய் கொண்ட அனைத்து கட்சிகளும் மசோதாக்களை ஒரு மனதாக ஆதரித்துள்ளன.

இதையடுத்து மீண்டும் அந்த மசோதாக்கள் ஜெட் வேகத்தில் ராஜ்பவனுக்கு பறந்துள்ளது. இதனால் மீண்டும் சாக்குபோக்கு சொல்லி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்த முடியாது என்ற கட்டாயம் கவர்னர் மாளிகைக்கு வந்துள்ளது. இது ஒருபுறமிருக்க சிறப்பு பேரவை கூட்டத்தில் ‘காலம் தாழ்த்தும் கவர்னரின் தாழ்வான எண்ண ஓட்டங்கள்’ குறித்தும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் முதல்வர். தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் திராவிட கொள்கை, சமத்துவம், சமூகநீதி, பகுத்தறிவு, சுயமரியாதை போன்றவை கவர்னரால் ஏற்க இயலாத ஒன்றாக இருக்கிறது.

அவரது அபத்தமான கருத்துக்கள் ஒவ்வொரு முறையும் இதை உறுதிப்படுத்தி வருகிறது. இந்தவகையில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கும், கவர்னருக்குமான பிரச்னை என்பது நாம் நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களில் அல்ல. சமூகரீதியாகவே இருக்கிறது என்ற முதல்வரின் கூற்று உண்மையானது. ‘‘தமிழ்நாடு சட்டமன்றம் ஜனநாயக விழுமியங்களை எப்போதும் போற்றி பாதுகாத்து வருகிறது. சமூகநீதியின் அடிப்படையில் இங்கு சமூக நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி செயல்படுத்தப்படுகிறது. இந்தவகையில் இந்திய ஒன்றியத்திற்கே முன்னோடியாக திகழ்கிறது தமிழ்நாடு,’’ என்ற முதல்வரின் கம்பீர முழக்கமும் இங்கே பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது