காந்தியின் சுயசரிதையை படியுங்கள் உங்களை உயர்ந்தவர்களாக மாற்றும்: ஆளுநர் திடீர் அந்தர்பல்டி

தேனி: ‘காந்திஜியின் சுயசரிதையை படியுங்கள். உங்களை உயர்ந்தவர்களாக மாற்றும்’ என்று தேனியில் பள்ளி மாணவர்களுடன் நடந்த உரையாடலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். தேனியில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவியருடன் உரையாடினார். அப்போது ஒரு மாணவி, ‘‘தொழில்நுட்ப வளர்ச்சி கிராமப்புற மாணவர்களுக்கு கல்வியில் உதவிகரமாக உள்ளதா’’ என கேள்வி எழுப்பினார். அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘‘தொழில்நுட்பம் இல்லாமல் கல்வியில் வளர்ச்சி இல்லை.

இந்த தொழில்நுட்ப வளர்ச்சி போதாது. ஆனாலும் மொபைல் போன் ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எந்நேரமும் எதையாவது மொபைல் போனில் பார்க்கிறார்கள். நேரம் வீணாகிறது. கல்விக்கு தேவையானவற்றை மொபைல் போனில் பயன்படுத்தினால் நல்லது. பாடப்புத்தகம் மட்டுமின்றி நல்ல அறிவாற்றல் மிகுந்த பிற புத்தகங்களையும் படிக்க வேண்டும். காந்திஜி உள்ளிட்டோரின் சுயசரிதையை படியுங்கள்.

இவையெல்லாம் உங்களை உயர்ந்தவர்களாக மாற்றும்’’ என்றார். சமீபத்தில் விடுதலை போராட்டத்தில் மகாத்மா காந்தியின் பங்களிப்பை குறைவாக மதிப்பிடும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்தன. பின்னர், காந்தியை பற்றி அப்படி பேசவில்லை என்று விளக்கமளித்தார். இந்நிலையில் தேனியில் நடந்த விழாவில் மகாத்மா காந்தியை உயர்த்தி பிடிக்கும் வகையில் ஆளுநர் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

* ஆளுநருக்கு இந்தியா கூட்டணி கருப்புக்கொடி
தனியார் பள்ளியில் மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக, தேனிக்கு நேற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வந்தார். இவர், தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு எதிராக பொதுவெளியில் பேசி வருவதாகவும், பாஜ அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கூறி அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆளுநரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

Related posts

ஆசிரியர்களின் மாதாந்திர சம்பளத்தை நிறுத்தாமல் வழங்குக: தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

பண்ருட்டி அருகே மின்சாரம் பாய்ந்து 12 பேர் காயம்

திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி