ராயபுரம் தொகுதியில் ரூ.300 கோடியில் திட்டப்பணிகள்: அமைச்சர் சி.வெ.கணேசன் தகவல்

தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதியில் அரசு மருத்துவமனை உள்பட ரூ.300 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் சி.வெ. கணேசன் தெரிவித்தார். சென்னை வடக்கு மாவட்டம், ராயபுரம் மேற்கு பகுதி திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவி மற்றும் இன்னிசை கச்சேரி வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்திற்கு ராயபுரம் மேற்கு பகுதி செயலாளர் வ.பெ.சுரேஷ் தலைமை வகித்தார். ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தொழில்துறை மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்துகொண்டு சினிமா பாடகர்கள் கலந்துகொண்டு இன்னிசை கச்சேரியை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி, 6 பேருக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்.

அப்போது, அவர் பேசியதாவது: ராயபுரம் தொகுதியில் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் 300 கோடியில் நடந்து வருகிறது. தமிழக முதல்வர், நான் முதல்வன் திட்டம் கொண்டு வந்து ஒரு மாணவன் மேல் படிப்பில் படிக்க என்ன செய்ய வேண்டும், படித்து முடித்ததும் எங்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது குறித்து அறிந்துகொள்ள ஒரு திட்டத்தை ஏற்படுத்தி உள்ளார். தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000, மகளிருக்கு மாதம் ரூ. 1000, பேருந்தில் இலவச பயணம், முதியோர் உதவி திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை இப்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.5000 வரும் அளவிற்கு முதல்வர் ஆட்சி செய்து வருகிறார்.

அதற்கு சான்று நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை நாம் பெற்றோம். இன்னும் பல்வேறு திட்டங்களை முதல்வர் செய்து வருகிறார். கலைஞர் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளார். அவருக்கு நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், சென்னை வடக்கு மாவட்ட செயலாளரும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.சேகர், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர், தலைமை செயற்குழு உறுப்பினர் ந.மனோகரன், ராயபுரம் கிழக்கு பகுதி செயலாளர் செந்தில் குமார், வழக்கறிஞர் மருது கணேஷ், பகுதி துணை செயலாளர் கு.ரமேஷ், வட்ட செயலாளர் இரா.பாலன், ரெயின்போ விஜய் குமார், மாமன்ற உறுப்பினர்கள் விஜயலட்சுமி விஜயகுமார், கீதா சுரேஷ், வேளாங்கண்ணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Related posts

ஐக்கிய அரபு அமீரகத்தில் தச்சர், பிளம்பர், பிட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்

உ.பி.யில் நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்

3 வாகன ஓட்டுநர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்