ராயப்பேட்டையில் மெட்ரோ ரயில் பணி: சுரங்கம் தோண்டும் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்

சென்னை: ராயப்பேட்டையில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். குறிஞ்சி முகாம் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் நிதி ஒதுக்கீடு, பிற நிதி ஆதாரங்கள் மூலம் நடைபெற்று வரும் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள் மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் தொடர்பான உயர்நிலை ஆய்வுக்கூட்டம், சிறப்புத்திட்டச் செயலாக்கத்துறை சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், ஒவ்வொரு வழித்தடங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ திட்டப் பணிகள், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்ற தகவல்களை அதிகாரிகள், அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அப்போது விரிவானத் திட்ட அறிக்கைகள், சாத்தியக்கூறு அறிக்கைகள், வழித்தடம் மற்றும் பணிகள் நடைபெறும் இடங்களின் வரைபடங்கள் போன்றவற்றை காண்பித்து, மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்ட பணிகளையும், ஒருங்கிணைந்த பொதுப்போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதற்கான அம்சங்களையும் அதிகாரிகள் விளக்கினர்.பின்னர் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனை அருகில் உள்ள 3ம் வழித்தடத்தில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளை பார்வையிட்டு, ராயப்பேட்டை மற்றும் ராதாகிருஷ்ணன் சாலைக்கு இடையேயான சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை இயக்கி தொடங்கி வைத்தார்.

இப்பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் படிப்படியாக விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அதிகாரிகள், அலுவலர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தயாநிதிமாறன் எம்பி, மாநகராட்சி நிலைக்குழு தலைவர் சிற்றரசு, மண்டல குழுத்தலைவர் மதன் மோகன், சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் ஹர் சகாய் மீனா, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஸ் அஹமத், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் அர்ச்சுனன் மற்றும் மெட்ரோ ரயில் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related posts

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்? – காங்கிரஸ் தலைவர் கார்கே

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் பிரமோற்சவம் குதிரை வாகனத்தில் விநாயகர் அருள்பாலிப்பு

கரூர் சுங்ககேட் முதல் தான்தோன்றிமலை வரை ₹5 கோடியில் பேவர் பிளாக் நடை பாதை