ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டாக்டர் சஸ்பெண்ட் எதிர்த்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவராக இருந்த மருத்துவர் சுப்பையா சண்முகத்திற்கு எதிராக பெண் மருத்துவர் பாலியல் புகார் அளித்திருந்தார். அதன்படி சுப்பையா, காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பிறகு பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். இந்த உத்தரவுகளை எதிர்த்து சுப்பையா சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தன. சுப்பையா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்வ திருமுருகன், செவிலியர்கள் உடை மாற்றும் அறையில் யாரோ கேமரா வைத்து படம் பிடித்து உள்ளனர்.

இது தொடர்பாக சுப்பையா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த வீடியோவில் இருப்பது சுப்பையா இல்லை. அவருக்கு எதிரான புகாரின் மீது விசாரணை நடத்திய விசாகா குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், சுப்பையாவுக்கு எதிராக தொடர்ச்சியாக புகார்கள் வந்துள்ளன. இவரை போன்ற நபர்களுக்கு நீதிமன்றம் கருணை காட்டக் கூடாது. பெண் மருத்துவர் அளித்த புகார் அடிப்படையிலேயே சுப்பையா பணியிட மாற்றப்பட்டார் என்றார். இதையடுத்து நீதிபதி, சுப்பையாவின் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

Related posts

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி

கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு..!!