அனுமதியின்றி ராட்டினம் அமைத்தால் கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே கோயில் திருவிழாவில் ராட்டினம் சரிந்து விழுந்தது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். இனி அனுமதியின்றி ராட்டினம் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரித்துள்ளார்.

திருப்பத்தூர் அடுத்த பசலிக்குட்டை கிராமத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி 18ம்நாள் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருவிழாவையொட்டி அங்குள்ள மைதானத்தில் சிறுவர்களை கவரும் வகையில் ராட்சத ராட்டினங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் தற்காலிக உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் சுமார் 100 அடி உயரமுள்ள ராட்சத ராட்டினத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் விளையாடிகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராமல் ராட்டினம் சரிந்தது.

இதனால் ராட்டினத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், போலீசார் ராட்டினத்தில் சிக்கியிருந்த பெண்கள், சிறுவர்கள் உட்பட 80 பேரை பத்திரமாக மீட்டனர். போலீசார் விசாரணையில் ராட்டினம் அமைக்க உரிய அனுமதி பெறாதது தெரிய வந்தது. இதுகுறித்து ராச்சமங்கலம் விஏஓ சிவக்குமார் கொடுத்த புகாரின்பேரில் திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து ராட்டின உரிமையாளர் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், சிவலிங்கம், ரங்கராஜன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இதுதொடர்பாக எஸ்பி ஆல்பர்ட்ஜான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இனி ராட்டினம் அமைக்கும்போது அதன் உரிமையாளர்கள் உரிய அனுமதி பெற வேண்டும். பாதுகாப்பு கட்டமைப்பை உறுதி செய்ய வேண்டும். அதைமீறி கோயில் திருவிழாக்களில் அனுமதியின்றி ராட்டினம் அமைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு