ரத்தன் டாடாவின் கல்விச் சேவைகள்

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மரணம் இந்தியா முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சமூக ஊடகங்களில் அவருக்கான அஞ்சலியை ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் செலுத்தியுள்ளனர். ஏன் ஒரு தொழிலதிபரின் மரணம் மக்களை கண்ணீர் மல்கச் செய்தது எனில் மற்ற தொழிலதிபர்களிடமிருந்து மாறுபட்டவர் இவர்.

“வேகமாக நடக்க விரும்பினால் தனியாக நடக்கவேண்டும். வெகு தூரம் நடக்க விரும்பினால் ஒன்றாக நடக்கவேண்டும்” இது ரத்தன் டாடாவின் புகழ் பெற்ற பொன்மொழி. உலகில் உள்ள அத்தனை தொழிலதிபர்களும் வேகமாகவே நடக்க விரும்பியபோது டாடா மட்டுமே வெகுதூரம் நடக்க விரும்பி மக்களோடு இணைந்து நடந்தார்.

மும்பையில் நவல் டாடா மற்றும் சூனி டாடாவின் இணையருக்கு மகனாக 1937ஆம் ஆண்டு டிசம்பர் 28 அன்று பிறந்தவர் ரத்தன் டாடா. அவரின் பத்தாவது வயதில் பெற்றோர் பிரிந்துவிட்டனர். எனவே பாட்டிதான் அவரை வளர்த்துள்ளார். டாடா 8ஆம் வகுப்பு வரை மும்பையில் உள்ள கேம்பியன் பள்ளியிலும் அதன் பின்னர் கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளி, சிம்லாவில் உள்ள பிஷப் காட்டன் பள்ளி, நியூயார்க் நகரில் உள்ள ரிவர்டேல் கண்ட்ரி பள்ளி ஆகியவற்றில் தனது படிப்பைத் தொடர்ந்தார். 1962-ல் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில் பட்டமும், 1975-ல் ஹார்வர்டு வணிகக் கல்லூரியில் உயர் மேலாண்மைப் பட்டமும் பெற்றவர்.

ஆனாலும் எளிய மக்களுக்காக சிந்தித்தவர், அதன் விளைவாக டாடா இண்டிகா என்னும் சிறிய வகை காரை உருவாக்கி குடும்பத்தோடு இரு சக்கர வாகனங்களில் சிரமப்பட்டு பயணித்தவர்களுக்கு காரில் பயணிக்கலாம் என்ற நம்பிக்கையை அளித்தார். இன்னும் ஒருபடி மேலே சென்று ஒரு லட்சம் ரூபாய்க்கு நேனோ காரையும் இந்த சமூகத்திற்கு அளித்தவர்.

எளிய மக்களும் வசதியானவர்களுக்கு நிகராக வாழ விரும்பி உணவு உடை பயணம் தொழிநுட்பம் நிதி தகவல் வணிகம் என பன்னிரண்டுக்கும் மேற்பட்ட துறைகளில் தனி முத்திரை பதித்த டாடா கல்வித்துறைக்கும் இந்திய அளவில் பல்வேறு உதவிகளை செய்துள்ளார். மலைவாழ் மக்களுக்கு கல்வி அளிப்பதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவரும் உண்டு உறைவிடப் பள்ளி என்னும் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தவர் இவரே.

டாடா அறக்கட்டளை மூலம் கல்விக்கான பல்வேறு முன் முயற்சிகளைச் செய்துள்ளனர். 12 மாநிலங்களில் 44000 பள்ளிகளில் இரண்டு லட்சம் ஆசிரியர்களைக் கொண்டு இருபத்தோரு லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். கல்வியில் பின்தங்கியுள்ள பழங்குடிமக்கள், ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபான்மைச் சமூகத்தினர் ஆகியோரின் கல்வி வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு டாடா அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.

அஸ்ஸாம் மாநிலத்தில் பொருளாதார நிலை காரணமாக மாணவர்கள் பள்ளியிலிருந்து இடை நிற்றல் விகிதம் அதிகரித்தது. இது தொடக்கக் கல்வியில் மிகப்பெரிய சவாலாக இருந்தது. இதனைத் தீர்க்கும் நோக்கத்தில் 2019 ஆம் ஆண்டு டாடா அறக்கட்டளை (ASI) எனப்படும் அஸ்ஸாம் மாநில முன் முயற்சி என்னும் திட்டத்தோடு களமிறங்கி வெற்றி கண்டது. இந்த திட்டத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளனர். ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நிவாரண உதவிகளைப் பெற்றுள்ளனர்.

கர்தா முன் முயற்சி எனும் சமூக இயக்கத்தினை டாடா அறக்கட்டளை தொடங்கியுள்ளது. கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்திட பொருளாதாரம் ஒரு தடையாக விளங்கிவிடக் கூடாது என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்ட இயக்கம் இது. இதற்கு உலகெங்கிலும் உள்ள கொடையாளர்கள் உதவி செய்து வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்த மாணவர்களே எதிர்காலத்தில் இதனை நிர்வகித்து தொடர வேண்டும் என்பதே இதன் சிறப்பு ஆகும். உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் ஆதரவோடு இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது.

2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 14% உள்ள இஸ்லாமியர்கள் இந்தியாவின் மிகப்பெரிய சிறுபான்மை சமூகமாக உள்ளனர். சச்சார் கமிட்டி அறிக்கைபடி, இஸ்லாமியர்களின் கல்வியறிவு விகிதம் 59% மட்டுமே. 6-14 வயது உள்ள மாணவர்களில் கால் பகுதிக்கும் அதிகமானோர் பள்ளிக்குச் செல்லவில்லை, அல்லது பள்ளியை விட்டு வெளியேறியவர்கள். 24% இஸ்லாமியர்கள் மட்டுமே மெட்ரிகுலேஷன் முடித்துள்ளனர். இது தேசிய சராசரியான 42.5% ஐ விட மிகக் குறைவாக உள்ளது. எனவே, இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டது மதரசா திட்டம்.

இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் செயல்படும் கல்வி நிறுவனங்களோடு டாடா அறக்கட்டளை இணைந்து கற்பித்தல் கற்றல் செயல்முறைகளின் தரத்தை மேம்படுத்தி சிறுபான்மை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு துணைபுரிகிறது. குழந்தைகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக தமிழக பள்ளிக் கல்வித்துறை வாசிப்பு இயக்கத்தை நடத்தி வருகிறது. குழந்தைகளைக் கவரும் நூற்றுக்கணக்கான கதைப் புத்தகங்களை பள்ளி நூலகங்களுக்கு வழங்கியுள்ளனர்.

இதற்கு முன்பிருந்தே டாடா அறக்கட்டளை இந்திய குழந்தைகளின் வாசிப்புத் திறனை அதிகப்படுத்தவும் குழந்தை எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தவும் பல்வேறு வட்டார மொழிகளில் நூல்களை வெளியிட்டு பராக் முன் முயற்சி என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் குழந்தைகளுக்கு தரமான இலக்கிய நூல்கள் கொண்ட நூலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவரை ஏழு மாநிலங்களில் மூன்று லட்சம் நூல்களைக் கொண்ட 1074 நூலகங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. குறிப்பிடத்தகுந்த குழந்தை எழுத்தாளர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக பிக் லிட்டில் புக் அவார்டு (BLB) விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் எளிய மக்களுக்காக சிந்தித்த அந்த மாமனிதரை என்றும் நினைவில் கொள்வோம்.

Related posts

வேலூர் அடுத்த பொய்கை சந்தையில் சண்டை கோழிகள் ரூ5 ஆயிரம் வரை விற்பனை

மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது

2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்