ராசிபுரத்தில் பரபரப்பு கணவர், மகளுடன் கவுன்சிலர் தற்கொலை

ராசிபுரம்: ராசிபுரம் அருகே மகள், கணவருடன் பெண் கவுன்சிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பொம்மி தெருவைச் சேர்ந்தவர் அருண் பிரகாஷ்லால் (54). திமுக நகர துணை செயலாளரான இவர், கடை வீதியில் 20 வருடங்களுக்கும் மேலாக நகைக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி தேவிபிரியா (43). இவர் நாமக்கல் நகராட்சி 13வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்தார். இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள் ரித்திகாஸ்ரீ(22), கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இளைய மகள் மோனிகாஸ்ரீ(16), தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல மூவரும் வீட்டில் படுத்து தூங்கினர். நேற்று காலை வெகுநேரமாகியும் வீடு திறக்கவில்லை. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வந்து வீட்டின் கதவை தட்டினர். நீண்ட நேரமாகியும் யாரும் திறக்காததால், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அப்போது, தேவிபிரியா, அருண் பிரகாஷ்லால் ஆகியோர் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து ராசிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து வீட்டின் கதவை உடைத்து சென்று பார்த்தனர். அங்கு தேவிபிரியா, அருண் பிரகாஷ்லால் ஆகியோர் தூக்கிலும், மோனிகாஸ்ரீ வாயில் நுரை தள்ளியபடி தரையிலும் இறந்து கிடந்தனர். அருண் பிரகாஷ்லால் நடத்தி வந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டனரா? கடன் தொல்லையா அல்லது குடும்ப பிரச்னையா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மோனிகாஸ்ரீ வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்ததால், அவருக்கு விஷத்தை கொடுத்து கொன்று விட்டு, பின்னர் கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். தம்பதியின் செல்போன்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். தகவலறிந்து, பெங்களூருவில் இருந்து ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்த மூத்த மகள் பிரியா, பெற்றோர் மற்றும் தங்கையின் உடல்களை பார்த்து கதறி அழுதார். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது