என்னை அறைந்த பெண் காவலரை பாராட்டினால் பலாத்காரம் செய்தாலும் உங்களுக்கு ஓ.கேவா?.. நடிகை கங்கனா கேள்வி


புதுடெல்லி: இமாச்சலப்பிரதேசம், மண்டி தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் வெற்றி பெற்றார். சண்டிகர் விமான நிலையத்தில் அவரை துணை ராணுவத்தை சேர்ந்த சிஐஎஸ்எப் பெண் காவலர் குல்விந்தர் கவுர் கன்னத்தில் அறைந்தார். விவசாயிகள் போராட்டத்தின்போது கங்கனா கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரை பெண் காவலர் அறைந்ததாக கூறப்படுகின்றது. இது குறித்த புகாரின்பேரில் சிஐஎஸ்எப் பெண் காவலர் சஸ்பென்ட் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. பெண் காவலருக்கு விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் சிஐஎஸ்எப் பெண் காவலருக்கு ஆதரவு மற்றும் பாராட்டு தெரிவிப்பவர்களுக்கு கங்கனா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கங்கனா தனது எக்ஸ் பதிவில், ‘‘ஒருவரின் அந்தரங்க பகுதிக்குள் நழைந்து அவர்களின் அனுமதியின்றி அவர்களின் உடலை தொடுதல் மற்றும் தாக்குதல் சரி என்று நீங்கள் நினைத்தால், பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்வதையும் சரி என்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் , அது அவர்களுக்கு ஒரு உந்துதலாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தை கையில் எடுக்க கூடாது
பெண் காவலரிடம் அறை வாங்கிய கங்கனாவுக்கு மூத்த நடிகையான சபானா ஆஷ்மி ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், ‘‘கங்கனா மீது எனக்கு எந்த அன்பும் இல்லை. ஆனால் அவரை அறைந்ததை கொண்டாடுவோர்களுடன் நான் சேரவில்லை. பாதுகாப்பு பணியாளர்கள் சட்டத்தை தங்களது கையில் எடுக்க ஆரம்பித்தால் நாம் யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

“நீங்கள் நலமா” … கலைஞர் உரிமைத் தொகை முறையாக வந்து சேருகிறது, மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக முதல்வரிடம் பயனாளி பதில்!!

சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்க கடத்தல் விவகாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை பணிநீக்கம் செய்யாதது ஏன் : உயர்நீதிமன்றம் கேள்வி