ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்தவர்கள் 57 பேர் மீட்பு

*அதிகாரிகள் தகவல்

அரக்கோணம் : ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாலைகளில் ஆதரவற்று சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த 57 பேர் மீட்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, நெமிலி, காவேரிப்பாக்கம், கலவை உட்பட பல்வேறு இடங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆதரவற்று தெருக்களில் சுற்றித்திரிவதாகவும், பஸ், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் தங்கியுள்ளதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதையடுத்து, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனை மற்றும் காப்பகங்களில் சேர்க்க கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மருத்துவ பணி இணை இயக்குனர் அலுவலகம் சார்பில் கடந்த 2 ஆண்டுகளில், மனநலம் பாதித்து பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த 57 பேர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், 25 பேர் குணமடைந்து சொந்த வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அரக்கோணத்தில் ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, பழனிப்பேட்டை இரட்டை கண் வாராவதி உட்பட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த ஒரு பெண் உட்பட 4 பேரை மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணக்குமார் தலைமையில் அதிகாரிகள், டவுன் போலீசார் உதவியுடன் மீட்டு வாலாஜாவில் உள்ள அரசு மருத்துவமனை மனநலம் பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

செய்யாறு, ஆரணி அருகே அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

கர்நாடகாவில் பாஜக எம்.பி. சார்பில் கட்சி தொண்டர்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டதால் சர்ச்சை: காங்கிரஸ் கண்டனம்

குழித்துறை அருகே பரபரப்பு ஓடையில் விழுந்து இரவு முழுவதும் உயிருக்கு போராடிய தொழிலாளி