ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமை புறக்கணித்து திருநங்கைகள் சாலை மறியல்

*அதிகாரிகள் சமசரம்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமை புறக்கணித்து திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டைகள் வழங்கும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

முகாமில் திருநங்கை, திருநம்பிகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக, இதர நலத்திட்ட உதவிகள் வழங்கும் தொடர்புத் துறைகளும் ஒருங்கிணைத்து அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ளுதல், வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றினை வழங்கிட மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை கலெக்டர் வளர்மதி திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமினை தொடங்கி வைக்க வந்த நிலையில் சிலர் மட்டுமே முகாமில் வந்திருந்ததால் அங்கிருந்து கலெக்டர் வளர்மதி ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தியை தொடங்கி வைக்க சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் தலைமையில் சமூக நல பாதுகாப்பு அலுவலர் சாந்தி முன்னிலையில் முகாம் தொடங்கி நடந்து வந்தது.

அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட திருநங்கைகள் கூறுகையில், ‘வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போது வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா, பசுமை வீடு கேட்டு கோரிக்கை மனு கொடுத்தோம். பின்னர் ராணிப்பேட்டை மாவட்டம் தொடங்கியது முதல் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்தோம். கடந்த 13 வருடங்களாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டும், பசுமை வீடு கேட்டும் மனு கொடுத்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என கூறினர்.

அதைத்தொடர்ந்து, சிறப்பு முகாம் கலெக்டர் தலைமையில் நடக்காதது கண்டித்தும், நாங்கள் கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்தும், முகாமினை புறக்கணித்து ராணிப்பேட்டை- சித்தூர் எம்.பி.டி சாலையில் திருநங்கைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை ரோட்டில் வீசி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை டி.எஸ்.பி பிரபு மற்றும் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிறகு திருநங்கைகள் சாலை மறியல் கைவிட்டு கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருநங்கைகளுடன் வாலாஜா தாசில்தார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பின்னர் அவர்கள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து சிறப்பு முகாம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி பேசியதாவது: காலையில் முகாம் தொடங்கிய போது உங்களின் வருகை குறைவாக இருந்தது.

அதனால் மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடக்க நாள் என்பதால் ஆற்காடு தாலுகா அலுவலகத்திற்கு எனது தலைமையில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற சென்றேன். 12.30 மணிக்கு இந்த முகாமில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தேன். இந்த சிறப்பு முகாமில் ஆதார் கார்டு திருத்தம், முதலமைச்சரின் விரிவான காப்பீடு அடையாள அட்டை, வாரியத்தில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்ய வேண்டியது தொடர்பாகத்தான் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. வீட்டுமனை பட்டா கேட்டு நீங்கள் மனு கொடுத்துள்ளீர்கள். நான் ராணிப்பேட்டை கலெக்டராக பொறுப்பேற்று கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

அனைத்து தாலுகாக்களிலும் ஜமாபந்தி நடக்கிறது. காலியாக உள்ள இடத்தினை பட்டியல் எடுக்க சொல்லி இருக்கிறோம். அதனை கணக்கீடு செய்து அந்தந்த தாலுகாவில் உள்ள காலியான இடங்களில் பட்டா வழங்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் தாய் அல்லது தந்தை இழந்த பிள்ளைகள் என அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வீடுகள் கட்ட ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜமாபந்தி ஜூன் 21ம் (நேற்று) தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ளதால் அந்தந்த தாலுகாவில் உள்ள காலி இடங்களை கணக்கீடு செய்து பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு கலெக்டர் வளர்மதி பேசினார். இதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட திருநங்கைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

Related posts

நிலக்கரி விற்பனை ஊழல்: அதானி மீது விசாரணையை தொடங்கியது லஞ்ச ஒழிப்புத்துறை

கூடலூர் அருகே காட்டு யானைகள் நடமாட்டம்..!!

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 110% கூடுதலாக பதிவு!!